புதுச்சேரி

புதுச்சேரிக்கு ரூ.15 ஆயிரம் கோடி சிறப்பு நிதி மத்திய அரசு வழங்கியுள்ளது - எல்.முருகன்

புதுவை அரசில் 5 ஆயிரம் பணியிடங்கள் நேரடியாக மெரிட் அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளது.

புதுவை மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:

புதுவையில் உள்கட்டமைப்பு திட்டங்களை மத்திய அரசும், பிரதமர் மோடியும் அளித்துள்ளனர். ராஜீவ்காந்தி 100 அடி சாலை மேம்பாலத்துக்கு ரூ.436 கோடி நிதிஒதுக்கப்பட்டுள்ளது. விமான நிலைய விரிவாக்கத்துக்கு ரூ.600 கோடிக்கு ஒப்புதல் வழங்கி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ரூ.92 கோடியில் ரெயில்வே நிலையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 5 லட்சத்து 10 ஆயிரம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். காரைக்காலில் ஜிப்மர் கிளை ரூ.491 கோடியில் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 11, 226 வீடுகள் புதுவை மாநிலத்தில் மத்திய அரசால் கட்டித்தரப்பட்டுள்ளது.

மீனவர் நலனுக்காக மத்திய அரசு தனி அமைச்சரவை வழங்கியது. ரூ.352 கோடியில் மீனவர்களுக்கான திட்டங்கள் புதுவைக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூ.37 கோடி விவசாயிகளுக்கு நிதியாக வழங்கப்பட்டுள்ளது. 30 ஆயிரம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் பேர் அரசு வேலை பெற்றுள்ளனர்.

புதுவை அரசில் 5 ஆயிரம் பணியிடங்கள் நேரடியாக மெரிட் அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.ஆயிரம் கோடியில் 678 திட்டங்கள் புதுவையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. 75 மின்சார பஸ்கள் மத்திய அரசு வழங்கியுள்ளது. புதிய பேருந்து நிலையம் கட்டித்தரப்பட்டுள்ளது.

சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க 750 ஏக்கர் நிலம் வழங்கி தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் ரூ.20ஆயிரம் கோடிக்கு முதலீடு வரும் வாய்ப்பு உள்ளது. 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். புதுவை காவல் துறைக்கு ஜனாதிபதி வர்ண விருது வழங்கப்பட்டுள்ளது.

ஐஆர்பிஎன் 2வது பட்டாலியன் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவர். கடந்த 5 ஆண்டில் புதுவைக்கு மத்திய அரசின் சிறப்பு நிதியாக ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி வீதம் ரூ.15 ஆயிரம் கோடி பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.

ஜிப்மரை விரிவாக்கம் செய்ய ரூ.ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உறுப்பு மாற்று சிகிச்சை மையம் அமைக்க ரூ.550 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் 4 ஆயிரத்து 399 நாள் ஆட்சியில் நம்பிக்கை, வளர்ச்சி, மக்களின் நலன் அடிப்படையில் சிறப்பான ஆட்சி நடந்துள்ளது. 2047ல் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க தீவிரமாக பணிகள் நடந்து வருகிறது.

12 ஆண்டுகள் சேவை செய்து வரும் பிரதமர் நல்ல உடல் நலன், ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் இந்தியாவுக்காக சேவை செய்ய வேண்டும். பிரதமர் மோடியுடன் நாம் அனைவரும் இணைந்து நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற பாடுபடுவோம். புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்த கோரிக்கை பரிசீலனையில் உள்ளது.

1990க்கு முன்பு ஒரே நேரத்தில் சட்டசபை, பாராளுமன்ற தேர்தல் நடந்துள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் செலவுகள் குறையும். மத்திய அரசு தேவையான சரியான நடவடிக்கை எடுக்கும். மேகதாது அணையில் அந்தந்த மாநில நலனுக்காக கோரிக்கை வைக்கின்றனர். நமது தண்ணீருக்காக நமது உரிமையை விட்டுத்தர முடியாது.

இதற்காகவே நதிகள் இணைப்பு திட்டத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கொண்டுவர முயன்றார். கடல் பாசி வளர்ப்பு திட்டத்தை திமுக ஆட்சியில் கிடப்பில் போட்டுவிட்டனர். புதிய தமிழக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.