புதுச்சேரி

‘அவர் என்ன கடவுளா?’: முதலமைச்சர் விஜய்யின் படத்தை காண்பித்த எம்எல்ஏவை கண்டித்த புதுவை சபாநாயகர்

விஜய் குறித்த பேச்சுப் பகுதியை அவைக்குறிப்பிலிருந்து நீக்க உத்தரவிட்டார்.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற்றது.

இத்தேர்தலில் ஆட்சியில் இருந்த என்.ஆர்.எஸ்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி, திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆகியவை முக்கிய ஆதிக்கம் செலுத்தின. தவெக தலைவர் விஜய்யின் தவெக இடம்பெற்றிருந்த கூட்டணியும் 30 இடங்களில் போட்டியிட்டது.

இதில் என்.ஆர்.காங்கிரஸ் 12, திமுக 5, பாஜக 4, அதிமுக, காங்கிரஸ், லட்சிய ஜனநாயக கட்சி தலா 1 தொகுதியினை கைப்பற்றின. தவெக கூட்டணி 3, சுயேட்சை வேட்பாளர்கள் 3 இடங்களில் வென்றனர்.

இதனைத்தொடர்ந்து கடந்த 13ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவரும், என்ஆர்எஸ் காங்கிரஸின் தலைவருமான ரங்கசாமி மீண்டும் புதுச்சேரியின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

இதனைத்தொடர்ந்து இன்று எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர். தற்காலிக சபாநாயகர் அன்பழகன் அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இதில் மணவெளி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற ராமும் பொறுப்பேற்று கொண்டார்.

அப்போது, தங்கள் கட்சியின் தலைவர் விஜய்யின் புகைப்படத்தை காண்பித்து கடவுள் எனப் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சபாநாயகர், விஜய் குறித்து அவர் பேசியவற்றை அவைக்குறிப்பிலிருந்து நீக்கக் கூறினார்.

மேலும் ஏற்கனவே 1008 கடவுள்கள் இருக்கிறார்கள், இவர் என்ன 1009தாவதா? என கேள்வி எழுப்பி இதுபோல் யாரும் செய்யக்கூடாது எனவும் தெரிவித்தார்.