புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் பர்மான். இவர் டெலிவரி ஆப் மூலம் புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள தனியார் மாலில் இயங்கி வரும் சர்வதேச உணவகத்தில் 4 கோழி இறைச்சி பர்கர் மற்றும் கோழி நகட்ஸ் ஆர்டர் செய்தார். அந்த உணவை சாப்பிட்ட அவரது குழந்தைக்கு திடீரென வாந்தி ஏற்பட்டது.
பின்னர் மீதமுள்ள பர்கரை எடுத்து பார்த்தபோது, அதில், வேகாத கோழி இறைச்சி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து, பர்மான், உணவகத்திற்கு சென்று அங்குள்ள ஊழியர்களிடம் வேகாத கோழி இறைச்சி பர்கரை காண்பித்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த உணவகத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, உணவகத்தின் நிர்வாக அதிகாரியிடம் இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியதுடன், அங்கிருந்த பர்கர் மற்றும் பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சி உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
அதோடு 2 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவில்லை எனில் உணவகத்திற்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.