புதுச்சேரி

பட்டாசு தீப்பொறி பறந்து குடில்கள் எரிந்து சாம்பல்- சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம்

தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பரவாமல் கட்டுப்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.

முதற்கட்ட விசாரணையில், தீபாவளி பட்டாசு வெடித்தபோது அதிலிருந்து பறந்து வந்த தீப்பொறி குடில்கள் மீது விழுந்ததே விபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

புதுச்சேரியில் கடலுக்குள் சென்று அழகை ரசிக்க சுற்றுலா பயணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற தனியார் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

பாண்டி மெரீனா

இதற்காக புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பாண்டி மெரீனா பகுதியில் பிரத்யேகமாக கொட்டகை (குடில்கள்) அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் காத்திருப்பதற்கான வசதிகள் மட்டுமின்றி, படகுகளை கட்டுவதற்கான கயிறுகள் மற்றும் பாதுகாப்பிற்கான லைப் ஜாக்கெட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

தீ விபத்து

இந்த நிலையில் அந்த குடில்கள் எதிர்பாராத விதமாக திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. கொட்டகையிலிருந்து புகையும், தீயும் கொழுந்துவிட்டு எரிவதைக் கண்ட சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவித்தனர்.

சேதம்

தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பரவாமல் கட்டுப்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு தீ கட்டுப்படுத்தப்பட்டது. இந்த தீ விபத்தில் 6 படகு நிறுவனங்களின் குடில்கள் சாம்பலானது.

பட்டாசு தீப்பொறி

இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. பொருட்கள் மட்டும் தீயில் எரிந்து சேதமடைந்தன. ஒதியஞ்சாலை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தீபாவளி பட்டாசு வெடித்தபோது அதிலிருந்து பறந்து வந்த தீப்பொறி குடில்கள் மீது விழுந்ததே விபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT