டெல்லிக்கு சென்ற அமைச்சர் நமச்சிவாயம் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலை சந்தித்து பேசினார்.
அப்போது கோரிக்கை கடிதம் அளித்தார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
புதுவை யூனியன் பிரதேசத்தின் புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட பிராந்தியமாகமாகி அமைந்துள்ளது. இது புதுவையில் இருந்து சுமார் 640 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
தற்போது மாகியில் சார்பு நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. சார்பு நீதிமன்றமே குடும்ப நல நீதிமன்றமாகவும் செயல்பட்டு வருகிறது.
புதுவையில் உள்ள 2-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் 2 மாதங்களுக்கு ஒருமுறை 3 நாட்கள் மாகிவில் முகாம் நீதிமன்றத்தை நடத்தி வருகிறது. இத்தகைய குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைபெறும் முகாம் நீதிமன்றம், மாகி மக்களின் அனைத்து நீதித்துறை தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாது.
எனவே, மாகியில் தற்போது செயல்பட்டு வரும் சார்பு நீதிமன்றத்தினை, உரிய சிவில் மற்றும் குற்றவியல் அதிகார வரம்புகளுடன் கூடிய முழுமையான மாவட்ட நீதிமன்றமாக தரம் உயர்த்த வேண்டும். மாவட்ட நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட வழக்கு விசாரணை களுக்காக, வழக்காடிகள் நீண்ட தொலைவு பயணம் செய்து புதுவைக்கு வர வேண்டிய அவசியத்தைத் தவிர்த்து, மாகியிலேயே நீதிமன்ற நிவாரணங்களை பெறுவதற்கான வசதியை உறுதி செய்ய வேண்டும்.
எனவே இந்த விவகாரத்தில் தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
புதுவை, காரைக்கால், மாகி ஏனாம் ஆகிய 4 பிராந்திய மக்களும் உயர் நீதிமன்ற வழக்குகளுக்காக சென்னைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் நேரம், பணம் விரயமாகிறது. புதுவையிலேயே உயர்நீதிமன்ற கிளை அமைந்தால், 4 பிராந்திய மக்களுக்கும் பெரும் பயனாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.