புதுச்சேரி

புதுச்சேரியில் 3 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு மளிகை பொருள் பரிசு தொகுப்பு

தீபாவளி பரிசு தொகுப்புக்கான உரிய ஒப்புதலைப் பெறுவதற்காக தற்போது நிதித்துறைக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் 3 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு தீபாவளி முன்பாகவே ரூ.700 மதிப்பில் 5 மளிகை பொருட்கள் கொண்ட பரிசு தொகுப்பு வழங்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. ரேஷன் கடைகள் மூலம் நேரடியாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நீண்ட காலமாக மூடிக்கிடந்த ரேஷன் கடைகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புத்துயிர் பெற்று மீண்டும் திறக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு தேவையான அரிசி விநியோகம் பணி தொடங்கப்பட்டது. மஞ்சள் நிறரேஷன் கார்டுகளுக்கு 10 கிலோ, சிவப்பு நிற ரேஷன் கார்டுகளுக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

இதுமட்டுமின்றி ஒவ்வொரு மாதமும் 1 கிலோ கோதுமை வழங்கும் திட்ட மும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தீபாவளி பரிசு பொருட்கள்

கடந்த காலங்களில் தீபாவளி பரிசு தொகுப்பு வழங்குவதில் கடைசி நேர குழப்பங்கள், டெண்டர் கோருவதில் தாமதம் போன்ற காரணங்களால், பண்டிகை முடிந்த பின்பு தான் பரிசு பொருட்கள் மக்கள் கைகளுக்கு சென்று சேரும் அவல நிலை இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அந்த நிலையை மாற்றி தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வி.பி. சிவக்கொழுந்து உத்தரவின் பேரில், பண்டிகைக்கு முன்பாகவே பரிசு தொகுப்பை வழங்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த ஆண்டுகளை போல் அல்லாமல், இந்த ஆண்டு முன்கூட்டியே குடிமைப்பொருள் வழங்கல் துறை தனது ஆயத்தப் பணிகளை தொடங்கி விட்டது. தீபாவளி பரிசு தொகுப்புக்கான உரிய ஒப்புதலைப் பெறுவதற்காக தற்போது நிதித்துறைக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.

இதற்கு ஒப்புதல் கிடைத்ததும் உடனடியாக டெண்டர் கோரப்பட உள்ளது. இதற்கான பணியை கான்பெட் நிறுவனம் தொடங்க உள்ளது.

இந்த பரிசு தொகுப்பில் 2 கிலோ சர்க்கரை, 3 லிட்டர் சன்பிளவர் ஆயில், 1 கிலோ கடலை பருப்பு, 500 கிராம் ரவா மற்றும் 500 கிராம் மைதா ஆகிய 5 மளிகை பொருட்கள் ரூ 700 மதிப்பில் இடம் பெறும்.

இந்த சிறப்பு தொகுப்பு வழக்கம் போல் ரேஷன் கடைகள் மூலம் நேரடியாக பொதுமக்களின் கைகளில் சேரும் வகையில் விநியோகம் செய்யப்படவுள்ளது. இந்த பரிசு பொருட்கள் மொத்தம் 3 லட்சத்து 45 ஆயிரத்து 974 ரேஷன் கார்டுகளுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது.

SCROLL FOR NEXT