புதுச்சேரி

புதுவையை உலுக்கிய சிறுமி கொலை வழக்கு - மே.5-ல் தீர்ப்பு!

முத்தியால்பேட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கருணாஸ் குற்றவாளி என தீர்ப்பு.

கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் 2ம் தேதி புதுவை முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயது சிறுமி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நிலையில், காணாமல் போனார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில், மார்ச் 5ம் தேதி சிறுமியின் உடல் வீட்டின் அருகே இருந்த கழிவுநீர் கால்வாயில், சாக்கில் சுற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த கருணாஸ் (20), கஞ்சா போதையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததும், அதற்கு உடந்தையாக விவேகானந்தன்(56) இருந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் புதுவை மட்டுமின்றி, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிறுமியின் மரணத்துக்கு நீதி கேட்டு பல கட்ட போராட்டங்கள் நடந்தது. சிறுமியின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். வழக்கை விசாரித்த போலீசார் கருணாஸ், விவேகானந்தன் ஆகியோரை கைது செய்தனர். வழக்கு விசாரணை தொடங்கியபோது, காலாப்பட்டு சிறையில் விவேகானந்தன் கழிவறையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கருணாஸ் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவ்வழக்கு புதுவை போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் மருத்துவ சான்றுகள், தடயவியல் சான்றுகள் உட்பட 37 வகையான சான்றுகள், 81 ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டது. 54 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விவேகானந்தன் தற்கொலை செய்ததால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டன. விவேகானந்தனின் தனிமையான வீட்டுக்கு சிறுமியை கருணாஸ் அழைத்து சென்றது, பாலியல் வன்கொடுமை செய்தது, கழுத்தை நெரித்து கொலை செய்தது, உடலை சாக்கில் சுற்றி கழிவுநீர் வாய்க்காலில் வீசியது என கருணாஸ் மீதான குற்றங்கள் குறித்து அரசு தரப்பில் ஆதாரங்களுடன் வாதம் முன்வைக்கப்பட்டது.

வழக்கில் ஆஜரான அரசு தரப்பு சிறப்பு வக்கீல் பச்சையப்பன், 48 பக்கங்கள் கொண்ட தனது எழுத்துப்பூர்வ வாதத்தை முன்வைத்தார். அதில், குற்றவாளிக்கு உள்ள தொடர்பு, கடுமையான சூழ்நிலைகளை பட்டியலிட்டார். சிறுமி இறக்கும் முன்பு கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார்.

குற்றவாளியின் சீர்கெட்ட, இரக்கமற்ற இயல்பே குற்றத்துக்கான காரணம். குற்றத்தின் தன்மை மிக கடுமையானது, ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டு மனசாட்சியை இச்சம்பவம் உலுக்கியுள்ளது. இந்த வழக்கின் உண்மைகள், சூழ்நிலைகள் குற்றம் சாட்டப்பட்டவரின் குற்றத்தை நிலைநாட்டியுள்ளன.

பிரேத பரிசோதனை அறிக்கை குற்றம் சாட்டப்பட்டவரின் மிருகத்தனமான நடத்தையை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வழக்கு அரிதிலும் அரிதான குற்றங்களின் வரம்பில் வருகிறது. எனவே நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவரை கடுமையாக தண்டித்து உச்சபட்சமாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என அவர் வாதிட்டார். பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் பிரவீன், இதே கருத்தை வலியுறுத்தினார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த போக்சோ விரைவு நீதிமன்ற நீதிபதி சுமதி, சட்டப்பிரிவு 366 பாலியல் குற்றத்துக்காக குழந்தையை கடத்தல், 342 சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், 302 கொலை, 201 தடயங்களை அழித்தல், போக்சோ பிரிவு 6ன் கீழ் கருணாஸ் குற்றவாளி என உறுதி செய்யப்படுகிறது என அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து வழக்கில் மே.5ஆம் தேதி வாதி, பிரதிவாதியின் இறுதிவாதம் நடக்கிறது. அதன்பின்னர் தீர்ப்பு விபரம் அறிவிக்கப்பட உள்ளது.

வழக்கு விசாரணையையொட்டி புதுவை நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பெண் கமாண்டோக்கள், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.