பல்வேறு வங்கி கணக்குகள் மூலம் மோசடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதும், அதனை கிரிப்டோ கரன்சியாக மாற்றுவதற்கு சில நபர்கள் வங்கி கணக்குகளை ஏற்பாடு செய்து கொடுத்ததும் தெரியவந்தது.
புதுச்சேரி கோரிமேட்டில் செயல்பட்டு வரும் அரசு பல் மருத்துவ கல்லூரியில் தனியார் வங்கிக் கணக்கிலிருந்து ஊழியர்களின் சம்பள பணம் உள்பட ரூ.8 கோடியே 85 லட்சத்து 39 ஆயிரத்து 962 திடீரென மாயமானது. இந்த பணம் பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் முறைகேடாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் முதல்வர் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் மோசடி செய்யப்பட்ட தொகையில் ரூ.38 லட்சம் ஒரு தனியார் வங்கி கணக்கிற்கும், ரூ.8 லட்சம் மற்றொரு தனியார் வங்கி கணக்கிற்கும் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் பல்வேறு வங்கி கணக்குகள் மூலம் மோசடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதும், அதனை கிரிப்டோ கரன்சியாக மாற்றுவதற்கு சில நபர்கள் வங்கி கணக்குகளை ஏற்பாடு செய்து கொடுத்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வங்கி கணக்குகளை ஏற்பாடு செய்து கொடுத்தல், அவற்றின் மூலம் மோசடி பணத்தை பெறுதல், பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுதல் மற்றும் கிரிப்டோகரன்சி மூலம் பணத்தை மாற்றுதல் போன்ற செயல்களில் ஈடுபட்ட நபர்களின் தொடர்புகளை கண்டறிந்தனர்.
அதனடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் தனிக்குழு அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த குழு தீவிர விசாரணை மேற்கொண்டு தஞ்சாவூர் மற்றும் சென்னையில் பதுங்கி இருந்த மோசடியில் தொடர்புடைய ஜோஸ் (27), பிரவீன் ராஜ் (25), சுந்தர் (44), முரளிக் குமார் (40) மற்றும் ஷபிக் (29) ஆகிய 5 பேரை கைது செய்து புதுச்சேரிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஷபிக் என்பவர் அவரது கூட்டாளியுடன் சேர்ந்து தனது தொழில் நடவடிக்கைகளுக்காக வங்கி கணக்குகள் தேவைப்படுவதாக கூறி, சுந்தர் மற்றும் முரளிக்குமார் ஆகியோர் மூலம் டேனியல் என்பவரிடமிருந்து பல்வேறு நபர்களின் வங்கி கணக்குகளை பெற்று பயன்படுத்தியது தெரிய வந்தது.
மேலும் டேனியல் அறிவுறுத்தலின்படி கைதான ஜோஸ் (27), பிரவீன் ராஜ் (25) ஆகியோர் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் சைபர் மோசடி பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்றுவதற்கு உதவி செய்ததுடன், அதற்காக கமிஷன் தொகையை பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து செல்போன்கள், லேப்டாப்கள், வங்கி புத்தகம், காசோலை புத்தகங்கள், நிறுவன முத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் செல்போன்களில் இருந்த முக்கியமான டிஜிட்டல் ஆதாரங்கள் தடயவியல் நடைமுறைகளின்படி சேகரிக்கப்பட்டுள்ளன.
இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் பல நபர்களை கண்டறியவும், மோசடி செய்யப்பட்ட பணத்தின் முழுமையான பண பரிவர்த்தனைகளை கண்டறியவும், கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளை ஆய்வு செய்யவும் சைபர் கிரைம். போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.