புதுச்சேரி

புதுச்சேரியில் தீபாவளி, பொங்கல் சீட்டு நடத்தி ரூ.4¼ கோடி மோசடி

சீட்டு நிறுவனம் அரசிடம் முறையாக பதிவு செய்யப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் சி.பி.சி.ஐ.டி.யில் புகார் கொடுக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் சென்னையை தலைமையிடமாக கொண்ட சீட்டு நிறுவனம் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

தீபாவளி சீட்டு

இங்கு தீபாவளி சீட்டு, பொங்கல் சீட்டு, வருடாந்திர சீட்டு, அட்சய திருதியை சீட்டு என 4 சீட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் புதுச்சேரியை சேர்ந்த ஏராளமானோர் சேர்ந்து பணம் கட்டினர்.

சீட்டு முடிந்த பிறகு அதற்குறிய பணத்தையோ, பலன்களோ அறிவிக்கப்பட்டது போல் கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த மக்கள் அலுவலகத்தை அணுகினர்.

அலுவலகம் மூடல்

ஆனால் அலுவலகம் மூடிகிடந்தது. அங்கிருந்த பொருப்பாளர்கள், ஊழியர்கள் தலைமறைவாகி இருந்தனர். இதனையடுத்து சீட்டு கட்டி ஏமாந்த முதலியார்பேட்டையை சேர்ந்த மதிவதனன் (வயது 38) சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்

விசாரணையில் புதுச்சேரியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் சீட்டு நிறுவனம் பணம் பெற்று ஏமாற்றியது தெரிய வந்தது. இதனையடுத்து சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த சீட்டு நிறுவன உரிமையாளர்கள் சத்தியமூர்த்தி, புவனேஸ்வரி, புதுச்சேரி பொறுப்பாளர்கள் வெற்றிச்செல்வன் அவரது மனைவி பவானி இளவேனில் மற்றும் கூட்டாளிகள் சென்னை திருவள்ளூர் வடிவேல, ரெட்ஹில்ஸ் லிங்கமூர்த்தி ஆகிய 6 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.

ரூ.4¼ கோடி வசூல்

இந்த சீட்டு நிறுவனத்தில் கடந்த 10.9.2022 முதல் 30.11.2023 வரை சுமார் ரூ.4¼ கோடி பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் சீட்டு நிறுவனம் அரசிடம் முறையாக பதிவு செய்யப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

புதுச்சேரியில் மட்டும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்? மேலும் பணம் வசூலிக்கப்பட்டதா? என சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் சி.பி.சி.ஐ.டி.யில் புகார் கொடுக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT