விமான சேவை 
புதுச்சேரி

புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு விரைவில் விமான சேவை- அதிகாரி தகவல்

விமான ஓடுபாதை விரிவாக்கம் செய்தால் 200-க்கும் மேற்பட்டோர் பயணிக்கும் பெரிய ரக விமானங்கள் வரும்.

புதுச்சேரி விமான நிலையத்தில் பயணிகளுக்காக பல்வேறு சிறப்பு சேவை தொடக்க விழா நடந்தது. இதனை விமான நிலைய இயக்குனர் ராஜசேகரரெட்டி தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒரு லட்சம் பயணிகள்

புதுச்சேரி விமான நிலையம் 1989-ம் ஆண்டு திறக்கப்பட்டு 37 ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. தற்போது 1,500 மீட்டர் ஓடுபாதை மட்டுமே உள்ளதால், 72 பேர் பயணிக்கும் சிறிய ரக விமானங்கள் மட்டுமே வந்து செல்கின்றன.

போர் பதற்றம் காரணமாக விமான எரிபொருள் விலை உயர்வால், பெங்களூரு, ஐதராபாத்துக்கு இயக்கப்பட்டு வந்த 3 விமானங்களில் ஒரு விமான சேவை சமீபத்தில் நிறுத்தப்பட்டது.

இருப்பினும் கடந்த 2025-2026-ம் நிதி ஆண்டில் புதுச்சேரி விமான நிலையத்திற்கு முதல் முறையாக ஒரு லட்சம் பயணிகள் வந்துள்ளனர்.

திருப்பதிக்கு விமான சேவை

விமான ஓடுபாதை விரிவாக்கம் செய்தால் 200-க்கும் மேற்பட்டோர் பயணிக்கும் பெரிய ரக விமானங்கள் வரும். பல மாநிலங்களுக்கு விமான சேவையும் விரிவடையும். இதன் மூலம் அதிகளவு வருவாய் கிடைக்கும். வருகிற 2027-ம் ஆண்டு விரிவாக்க பணி தொடங்கி 2030-ம் ஆண்டில் 2,300 மீட்டர் புதிய விமான ஓடுபாதை பயன் பாட்டிற்கு வரும்.

புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது புதுச்சேரியில் இருந்து ஐதராபாத் செல்லும் விமானம் முதலில் திருப்பதிக்கு சென்று விட்டு அதன் பிறகு ஐதராபாத் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.