புதுச்சேரி

தடைக்காலம் அமலில் உள்ளதால் புதுச்சேரியில் மீன்களின் விலை கிடுகிடு உயர்வு

காரைக்கால் மாவட்டத்தில் மண்டபத்தூர் மீனவ கிராமம் முதல் வடக்கு வாஞ்சூர் மீனவ கிராமம் வரையிலும் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

கடல் மீன்களின் இன பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் வங்கக் கடல், அரபிக் கடலில் வெவ்வேறு மாதங்களில் மீன்பிடி தடைக் காலத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.

அதன்படி கடந்த 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் வங்க கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. புதுச்சேரி பிரதேச கிழக்கு கடல் பகுதிக்கு உட்பட்ட கனகசெட்டிகுளம் மீனவ கிராமம் முதல் மூர்த்திக்குப்பம்- புதுக்குப்பம் மீனவ கிராமம் வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது.

இதேபோல் காரைக்கால் மாவட்டத்தில் மண்டபத்தூர் மீனவ கிராமம் முதல் வடக்கு வாஞ்சூர் மீனவ கிராமம் வரையிலும் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தேங்காய்திட்டு துறைமுகத்தில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதே வேளையில் கட்டுமரம், நாட்டு படகுகளில் சென்று கரையோரங்களில் மீனவர்கள் மீன்பிடிக்கின்றனர்.

தடைக்காலம் அமலில் உள்ளதால் பெரிய அளவிலான மீன்கள் வரத்து குறைந்துள்ளது. கேரளா உள்ளிட்ட அரபிக் கடல் பகுதியில் இருந்து மீன்கள் விற்பனைக்கு வருகிறது. வரத்து குறைவால் மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. (பழைய விலை அடைப்புக் குறிக்குள் போடப்பட்டுள்ளது ). அதன் படி வஞ்சிரம் கிலோ-ரூ.1,500 (ரூ1,100), வவ்வால் -ரூ.1,000 (ரூ.800), நாட்டு சங்கரா- ரூ.500 (ரூ.400), கொடுவா ரூ..700 (ரூ.500), பாறை ரூ.800 (ரூ.500), கடல் விரால்- ரூ.1,000 (ரூ700), நாட்டு கவளை ரூ.150 (ரூ.100), நண்டு-ரூ.400 (ரூ.300), டைகர் இறால்-ரூ.1,500 (ரூ.1,000) விற்பனையாகிறது.