சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்த 11 பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும், சாலை விபத்துக்களை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் (அக்டோபர்) 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை முக்கிய சந்திப்புகள், சாலைகள், விபத்துகள் அதிகம் நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டியதாக 3,225 பேருக்கும், அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதாக 251 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒருவழிப்பாதையில் வாகனத்தை ஓட்டுதல்- 7,133, சிக்னல்களை மீறுதல்- 1,476, மது போதையில் வாகனம் ஓட்டுதல்- 317, சிறுவர்கள் வாகனம் ஓட்டுதல் - 203, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல்- 5,081, காரில் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல்- 744, ஏர்ஹாரன் பயன்படுத்துதல்- 50, பிற விதி மீறல்கள்-6,733 என மொத்தம் 25,213 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்த 11 பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.