ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் ரமேஷ் குண்டு. இவரது மகள் தான்சில் (வயது28) புதுச்சேரி ஜிப்மரில் நர்சிங் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
ஜி.டி. நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த இவர் இரவு பணி முடிந்து நேற்று காலை வீட்டிற்கு புறப்பட்ட போது, வழக்கத்திற்கு மாறாக ஊழியர்கள் யாரிடமும் பேசாமல் அவசரமாக வீட்டிற்கு சென்றார்.
சந்தேகமடைந்த சக ஊழியர்கள் அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவருடன் பணியாற்றும் நர்சிங் அதிகாரிகள் பிரவீன், சிமா ஆகியோர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப் பட்டிருந்தது.
தொடர்ந்து, வீட்டின் உரிமையாளர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தான்சில் தனது படுக்கையில் சுயநினைவின்றி கிடந்தார். அவர் அருகே காலியான சர்க்கரை நோயாளிகளுக்கு செலுத்தப்படும் மருந்து பாட்டில்கள் மற்றும் தசை தளர்வுக்கு கொடுக்கப்படும் மருந்து குப்பி இருந்தது.
இதையடுத்து, தான் சிலை மீட்டு, ஜிப்மருக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தான்சில் ஊசியில் அளவுக்கு அதிகமாக மருந்து செலுத்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது உடனடியாக தெரியவில்லை.
இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.