புதுவையில் இந்தியா கூட்டணி தோல்விக்கு திமுகவே காரணம் என காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி கருத்து தெரிவித்தார்.
இதற்கு மாநில திமுக அமைப்பாளர் சிவா பதிலடி தந்துள்ளார். அவர். வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சட்டசபை தேர்தலுக்கு முன்பே, திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதால் கூட்டணிக்கு திமுக தலைமை தாங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தின. இருந்தபோதிலும், காங்கிரஸ் தனது தலைமையில் கூட்டணி செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.
கூட்டணி ஒற்றுமையை முன்னிறுத்திய திமுக, தனது அரசியல் வலிமை மற்றும் வளர்ச்சியை பொருட்படுத்தாமல் காங்கிரஸ் தலைமையை ஏற்றது. கூட்டணியின் வெற்றிக்காக திமுக தொடர்ந்து விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் செயல்பட்டது.
கூட்டணியில் இடம்பெற்ற விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்டு போட்டியிட்ட தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி வேட்பாளரை நிறுத்தியதால் இந்த கட்சிகள் தேர்தல் பணியாற்றிவில்லை. திமுக வெற்றி பெறக்கூடிய 6 தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். கூட்டணி ஒற்றுமையை பாதிக்கும் வகையிலான இந்த அணுகுமுறையையும் திமுக பொறுமையுடன் எதிர்கொண்டது.
கூட்டணிக்கு திமுக தான் தலைமை தாங்கியது, திமுக எதிரியை சரியாக மதிப்பிடவில்லை என்று வைத்திலிங்கம் கூறுவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. தேர்தல் காலம் முழுவதும் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை காங்கிரசே ஏற்றதாக தொடர்ந்து வலியுறுத்தி, தேர்தல் வாக்குறுதி அளித்தனர்.
ஆனால் இப்போது அதற்கு மாறாக பேசுவது அரசியல் வசதி வாதத்தை மட்டுமே காட்டுகிறது. கூட்டணிக்கு தலைமை தாங்கியது யார்? அதிக தொகுதிகளில் போட்டியிட்டது யார்? தேர்தல் வியூகங்களை வடிவமைத்தது யார்? என்பதற்கு புதுச்சேரி மக்களுக்கே பதில் தெரியும். அத்தகைய சூழலில், தேர்தல் தோல்விக்கான முழுப்பொறுப்பையும் திமுக மீது சுமத்தும் முயற்சி உண்மையை மறைக்கும் அரசியல் நாடகம்.
புதுவை அரசியலில் முதிர்ந்த அனுபவம் பெற்றுள்ள வைத்திலிங்கம் உண்மைகளைத் திரித்து பேசுவதை நிறுத்திவிட்டு, காங்கிரஸ் கட்சி ஏன் மக்களின் நம்பிக்கையை இழந்தது என்பதை முதலில் சுயபரிசோதனை செய்ய வேண்டும். திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைப்பதன் மூலம் வரலாற்று உண்மைகளை மாற்ற முடியாது.
இவ்வாறு சிவா தெரிவித்துள்ளார்.