புதுச்சேரி

புதுச்சேரி சட்டசபை கலைப்பு

பெரும்பான்மை பலம் உள்ள என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஆட்சி அமைக்க எப்போது உரிமைக் கோருகிறாரோ அப்போது கவர்னர் இந்த விஷயத்தில் முடிவு எடுப்பார்.

புதுவையின் 16வது சட்டப்பேரவைக்கான தேர்தல் நடந்து முடிந்து புதிய எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை அங்கீகரித்து இந்திய தேர்தல் ஆணையம் அரசியல் அமைப்புச் சட்டம் 73-வது பிரிவு அடிப்படையில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் புதிய எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் அதிகாரத்தை பெறுகின்றனர்.

அதனால் புதுவை சட்டப்பேரவை கலைக்கப்பட்டதாக சட்டமன்ற செயலாளர் தயாளன் தெரிவித்துள்ளார். 15வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் 15.6.26 வரை இருக்கிறது. முன்கூட்டியே தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் வெளியிடப்பட்டதால் இப்போது சட்டப்பேரவையும் கலைக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலமான 16 எம்.எல்.ஏக்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள என்.ஆர். காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக 1, லஜக 1 என 18 எம்.எல்.ஏக்களைப் பெற்றுள்ளது. பெரும்பான்மை பலம் உள்ள என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஆட்சி அமைக்க எப்போது உரிமைக் கோருகிறாரோ அப்போது கவர்னர் இந்த விஷயத்தில் முடிவு எடுப்பார்.

15வது சட்டப்பேரவையின் தலைவராக பதவி வகித்த செல்வம் புதியதாக அமையும் அரசின் சட்டப்பேரவைத் தலைவர் அல்லது தற்காலிக பேரவைத் தலைவர் பதவி ஏற்கும் வரை பதவியில் இருப்பார்.