புதுச்சேரி

தேர்தலில் படுதோல்வி - புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் ராஜினாமா!

சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை வைத்திலிங்கம் எம்.பி. ராஜினாமா செய்துள்ளார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.

இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் கூட்டணி தர்மத்தை மீறி திமுகவிற்கு ஒதுக்கப்பட்ட பிற 6 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட்டது.

ஒட்டுமொத்தமாக 21 தொகுதிகளில் கை சின்னத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. கூட்டணியில் இடம் பெற்ற இந்திய கம்யூனிஸ்ட்டு, மார்க்சிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் புறக்கணித்தது. இது தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தது. 

22 தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டும்தான் வெற்றி பெற்றது. மாநில தலைவரான வைத்திலிங்கம் தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல் அமைச்சர் ரங்கசாமியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். 

அவர் சுயேச்சை வேட்பாளரை விட பின்னுக்கு சென்று 4ம் இடத்தை பிடித்தார். அவர் டெபாசிட் தொகையையும் இழந்தார். இது காங்கிரசாருக்கு பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. 

மாநில காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒரு பிரிவினர் மாநில தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில தலைவர் வைத்திலிங்கத்தை, தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நீக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு தார்மீக பொறுப்பு ஏற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக, அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி எம்பி ஆகியோருக்கு வைத்திலிங்கம் எம்பி கடிதம் எழுதியுள்ளார்.