ரங்கசாமி 
புதுச்சேரி

புதுச்சேரி துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் ரூ.424ஆக உயர்த்தப்படும்: முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுவை மாநிலத்தை சுத்தமாக வைக்க தனியாரிடம் ஒப்பந்தம் செய்துள்ளோம். அவர்கள் முழு கவனத்தோடு ஈடுபட்டு புதுவை மாநிலத்தை சுத்தமாக வைக்க வேண்டும்.

புதுச்சேரி துப்புரவு பணியாளர்களின் சம்பளம் ரூ.290-ல் இருந்து ரூ.424-ஆக உயர்த்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். சுகாதார பணியாளர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் மருத்துவ சேவைகள் அரசு மூலம் வழங்கப்படும். தூய்மை பாரத தின விழாவில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

புதுவை உள்ளாட்சித்துறை சார்பில் துாய்மை பாரத தின விழா கம்பன் கலையரங்கில் நடந்தது. கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை வகித்தார். விழாவில் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

காந்தியின் எண்ணம்

நாடு சுதந்திரம் பெற்று வளமான, சிறந்த நாடாக வர வேண்டும் என எண்ணியவர் காந்தி. தூய்மையான பாரதத்தை உருவாக்க வேண்டும் என்பது அவரின் எண்ணம். அவரின் எண்ணப்படி தூய்மை பாரத தினம் கடைபிடிக்கப்படுகிறது.

சிறந்த மாநிலமான புதுவையை தூய்மையாக வைத்திருக்க வேண்டியது அனைவரின் எண்ணம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நோய் வராமல் இருக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

இதுகுறித்து மாணவர்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை உள்ளாட்சித்துறை ஒரு மாதம் நடத்துவது பாராட்டுக்குரியது. வெளிநாடுகளில் சுற்றுப்புறச்சூழல் மீது அக்கறையுடன் உள்ளனர்.

கூடுதல் பணியாளர்கள்

புதுவை மாநிலத்தை சுத்தமாக வைக்க தனியாரிடம் ஒப்பந்தம் செய்துள்ளோம். அவர்கள் முழு கவனத்தோடு ஈடுபட்டு புதுவை மாநிலத்தை சுத்தமாக வைக்க வேண்டும். ஒப்பந்தப்படி தேவையான எண்ணிக்கையில் பணியாளர்களை நியமித்து, குப்பைகளை அகற்ற வேண்டும்.

ஒப்பந்தப்படி துப்புரவு பணியை சரியாக செய்ய வேண்டும். அதை செய்ய வேண்டியது அவர்களின் கடமை. தூய்மைப்பணிக்கு தேவைப்படும் அனைத்து நிதியையும் அரசு வழங்குகிறது. சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் புதுவையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

உள்ளாட்சித்துறையில் அதிக கவனம் செலுத்தி இந்த பணிகளை கண்காணிக்க வேண்டும். குப்பை அகற்றும் பணியில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களும் ஈடுபடுகின்றனர். ஒப்பந்தத்தில் உள்ள விதிமுறைகளை தனியார் துப்புரவு பணி நிறுவனம் பின்பற்ற வேண்டும்.

சம்பளம் உயர்த்தப்படும்

சுகாதார பணியாளர்களின் மருத்துவ வசதி, சம்பளம் ஆகியவற்றை சரியாக வழங்க வேண்டும். சுகாதாரத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து தரும். துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஒப்பந்த கூலியான ரூ.290 ஜூன் மாதம் முதல் முன் தேதியிட்டு ரூ.424-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ராஜவேலு, வி.பி. சிவகொழுந்து, செல்வகணபதி எம்.பி. , எம்.எல்.ஏ.க்கள் நாராயணசாமி, அய்யப்பன், மோகன்தாஸ், ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT