புதுச்சேரி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆரோக்கிய மேம்பாட்டிற்காக, ராஜீவ்காந்தி காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் பாலுடன் 'சாக்லேட் மால்ட் ஹெல்த் மிக்ஸ்' கலந்து வழங்கும் புதிய நடைமுறை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுவை அரசுக்கும், ஸ்ரீ சத்யசாய் அன்னபூர்ணா அறக்கட்டளைக்கும் இடையே கையெழுத்தாகியுள்ளது.
புதுவை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ராஜீவ்காந்தி காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் எல்.கே .ஜி., முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 100 மி.லி. சூடான பால் வழங்கப்பட்டு வருகிறது.
பாலுடன் சாக்லேட் மால்ட் ஹெல்த் மிக்ஸ் கலந்து இனி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுவை அரசு மற்றும் சத்யசாய் அன்னபூர்ணா அறக்கட்டளை இடையே கையெழுத்தானது.
இதற்கான நிகழ்ச்சி, தலைமை செயலகத்தில் உள்ள கல்வித்துறை செயலர் அலுவலகத்தில் நடந்தது. அரசின் கல்வித் துறை செயலர் கிருஷண மோகன் உப்பு மற்றும் சத்யசாய் அன்னபூர்ணா அறக்கட்டளை அறங்காவலர் சந்தோஷ் அல்லத் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.