புதுச்சேரி

புதுவை அரசின் ரூ.14,300 கோடிக்கான பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி

புதுவை அரசின் விளக்கத்தை தொடர்ந்து இன்று காலை புதுச்சேரி பட்ஜெட்டுக்கான ஒப்புதல் கடிதம் மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து கிடைத்தது.

புதுச்சேரி சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது.

தேர்தல் காரணமாக நிதி ஆண்டான 2026–27க்கு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முடியவில்லை. இதற்கு பதிலாக அரசின் செலவினங்களுக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 15-வது சட்டசபையில் நிதி பொறுப்பு வகித்த முதல்-அமைச்சர் ரங்கசாமி ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 5 மாதங்களுக்கு ரூ.5 ஆயிரத்து 396 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் தேர்தல் முடிந்து என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இடைக்கால பட்ஜெட்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைகிறது. அதற்கு முன்பாக முழுமையான பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும்

இதற்கான புதுச்சேரி அரசு ரூ. 14 ஆயிரத்து 300 கோடிக்கு பட்ஜெட்டை இறுதி செய்து கடந்த மாதம் மத்திய உள்துறைக்கு அனுப்பி வைத்தது. ஆனால் மத்திய அரசின் ஒப்புதல் உடனடியாக கிடைக்கவில்லை.

அதற்கு பதிலாக பட்ஜெட் தொடர்பாக சில விளக்கங்களை புதுச்சேரி அரசிடம் மத்திய நிதி அமைச்சகம் கேட்டது. குறிப்பாக புதுச்சேரியின் கடன் நிலைமை குறித்து கேள்விகளையும் சந்தேகங்களையும் கேட்டது. அதற்கு புதுச்சேரி அரசும்

பதில் அனுப்பியது.

கடந்த மார்ச் 31-ந்தேதி நிலவரப்படி, புதுச்சேரியின் ஒட்டுமொத்த நிலுவைக் கடன் ரூ.11,876.38 கோடியாக உள்ளது. இதில் பெரும்பகுதி அதாவது 84.89 சதவீதமாக (ரூ.10,083.86 கோடி) இந்திய ரிசர்வ் வங்கியின் மூலம் பெறப்பட்ட சந்தை கடன்களாகும். இதர கடன்கள் பொதுக் கணக்கு, நபார்டு , சிறு சேமிப்பு பல்வேறு திட்டங்களின் கீழ் பெறப்பட்டுள்ளன.

கடன் மேலாண்மை கட்டுக்குள் தான் உள்ளது. கடந்த 2021-22 முதல் 2025-26 வரையிலான 5 ஆண்டுகளில், மொத்த அனுமதிக்கப்பட்ட கடன் வரம்பு ரூ.9,449.49 கோடியாக இருந்த நிலையில், புதுச்சேரி அரசு ரூ.7,522.92 கோடியை மட்டுமே கடனாகப் பெற்றுள்ளது.

மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21.19 சதவீதமாக உள்ளது. இது பரிந்துரைக்கப்பட்ட 25 சதவீதமாக வரையிலான கடன் வரம்பிற்குள் இருப்பதால், நிதிநிலை ஆரோக்கியமான நிலையில் உள்ளதாகக்

கருதப்படுகிறது.

மாநில அரசு தனது கடன் சுமையைக் கட்டுக்குள் வைக்க, ஒட்டுமொத்த கடன் வாங்குவதைக் குறைத்தல் மற்றும் வட்டி விகிதங்களை முறைப்படுத்துதல் போன்ற கடன் மேலாண்மை உத்திகளைக் கையாண்டு வருகிறது என மத்திய நிதி துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

புதுவை அரசின் விளக்கத்தை தொடர்ந்து இன்று காலை புதுச்சேரி பட்ஜெட்டுக்கான ஒப்புதல் கடிதம் மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து கிடைத்தது. இந்த தகவலை புதுவை முதல்-அமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

2026- 2027க்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய சட்டமன்றம் இந்த மாதம் இறுதியில் கூடுகிறது. அதற்கு முன்பாக புதுவை சபாநாயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும்.