தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய்க்கு அடுத்தபடியாக 2-வது அமைச்சராக இடம் பெற்றிருப்பவர் என்.ஆனந்த்.
இவர் புதுவை மாநிலத்தை சேர்ந்தவர். விஜய் ரசிகர் மன்றம் மக்கள் இயக்கமாக மாறி, அரசியல் கட்சியாக உருமாற முழுமையாக பாடுபட்டவர் ஆனந்த்.
அதோடு புதுவை சட்டசபையில் 2006ல் எம்எல்ஏவாகவும் பணியாற்றியுள்ளார். புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு நெருக்கமாக இருப்பவர். இவர் மூலம் த.வெ.க தலைவர் விஜய்யும், முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு நெருக்கமாக உள்ளார்.
அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஆனந்த் புதுவைக்கு வருவது குறைந்துள்ளது. பதவியேற்ற பிறகு 2 முறை ஆனந்த் புதுவைக்கு வந்தார். முதல்முறை தான் தினமும் வழிபடும் சின்னசுப்புராயப்பிள்ளை வீதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இருமுறை புதுவைக்கு வந்தும் முதல்-அமைச்சர் ரங்கசாமியை ஆனந்த் சந்திக்கவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு ஆனந்த் புதுவைக்கு வந்தார். முதல்-அமைச்சர் ரங்கசாமியை நள்ளிரவில் அவரின் வீட்டில் ஆனந்த் சந்தித்தார். அப்போது நீண்டநேரம் இருவரும் ஆலோசனை நடத்தினர்.
புதுவை தட்டாஞ்சாவடி தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இடைத்தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ் மீண்டும் போட்டியிட உள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு பிறகு கூட்டணியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
த.வெ.க அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. ஆனால் புதுவை காங்கிரசார் இதுவரை த.வெ.க. நிர்வாகிகளை சந்தித்து பேசவில்லை. இதனால் புதுவையில் காங்கிரஸ், த.வெ.க. கூட்டணி இருக்கிறதா? என்ற சந்தேகம் உள்ளது.
அதேநேரத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் தவெகவுடன் கூட்டணி அமைத்த புதுவை கட்சியான நேயம் மக்கள் கழகம் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்டது. அவர்கள் மீண்டும் தங்களுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரும்படி ஆனந்தை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
ஆளும்கட்சியான என்ஆர்.காங்கிரஸ் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது அவசியம். இந்த சூழ்நிலையில் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் தமிழக அமைச்சர் ஆனந்த் நள்ளிரவில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.