புதுச்சேரி:
பாரதியார் பல்கலைக்கூடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் பொறுப்பு முதல்வரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்.
அரசு நிதி ரூ.5 லட்சம் முறைகேடு புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் தலைமை செயலகம் முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக காமராஜர் சிலை அருகே பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் திரண்டனர். மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் தலைமையில் தலைமை செயலகத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.
ஊர்வலத்தில் மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகநாதன், திராவிடர் விடுதலை கழகம் லோகுஅய்யப்பன், திராவிடர் கழகம் சிவவீரமணி, மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர்செல்வன், தமிழர்களம் அழகர், எஸ்.டி.பி.ஐ. கட்சி தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், அம்பேத்கர் தொண்டர் படை பாவாடைராயன், உட்பட தமிழ் தேசிய பேரியக்கம் வேல்சாமி உட்பட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.
ஊர்வலம் ஆம்பூர் சாலையில் வந்த போது போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.