அமித் ஷா- மதுபானக்கடை
புதுச்சேரி

அமித் ஷா வருகை: மதுக்கடைகளை மூட உத்தரவு

அமித் ஷா வருகையால் புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 8 மணி வரை மதுக்கடைகள் மூடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழகம் மற்றும் புதுவையில் இன்று (சனிக்கிழமை) முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி மராட்டிய மாநில நிகழ்ச்சிகளை இன்று முடித்தபின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு இன்று மாலை 4.20 மணியளவில் செல்கிறார்.

சாமி தரிசனம்

ஹெலிகாப்டரிலிருந்து இறங்கும் அமித்ஷா காரில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ரமண ஆசிரமத்திற்கு செல்கிறார். அங்கு சுமார் 1 மணி நேரம் நடைபெற உள்ள சிறப்பு பூஜையில் பங்கேற்கும் அவர் பின்னர் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்கிறார். இதைத்தொடர்ந்து அமித் ஷா மாலை 6 மணியளவில் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு கார் மூலம் சாலை மார்க்கமாக புதுவை வருகிறார்.

இன்று இரவு 8 மணிக்கு புதுவை கவர்னர் மாளிகைக்கு வரும் அவரை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்கின்றனர். பின்னர் மக்கள் மாளிகையில் அவர் தங்குகிறார். நாளை காலை 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, கோரிமேடு போலீஸ் மைதானத்துக்கு 8.10 மணிக்கு வருகிறார். அங்கு போலீஸ்துறைக்கு ஜனாதிபதியின் வண்ண விருது வழங்கி உரையாற்றுகிறார்.

சந்திப்பு

பின்னர் காலை 10.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 10.25 மணிக்கு ஓட்டல் அக்கார்டு வருகிறார். அங்கு காலை உணவை முடித்து விட்டு, கவர்னர், முதல்-அமைச்சர், பா.ஜனதா மாநில தலை வருடன் உரையாடுகிறார். பிற்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை கட்சியின் முக்கிய தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்களை சந்திக்கிறார்.

தேசிய கொடி பேரணி

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு முருகா திரையரங்கு சந்திப்பில் 1.40 மணிக்கு ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி என்ற பேரணியை தொடங்கி வைக்கிறார். மதியம் 2 மணிக்கு அங்கிருந்து கிளம்பி புதுவை விமான நிலையம் சென்று சென்னை புறப்பட்டு செல்கிறார். அவரை கவர்னர், முதல்-அமைச்சர் வழியனுப்பி வைக்கின்றனர்.

தீவிர பாதுகாப்பு

மத்திய மந்திரி அமித் ஷா வருகையையொட்டி புதுவை நகர பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 8 கம்பெனி ரிசர்வ் பட்டாலியன் படையினர் புதுவைக்கு வந்துள்ளனர். அவர்கள் புதுவை போலீசாருடன் சேர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய மந்திரி தங்கும் கவர்னர் மாளிகை, கடற்கரை சாலை, கோரிமேடு மைதானம், மத்திய மந்திரி செல்லும் வழிகள், ஓட்டல் அக்கார்டு, விமான நிலையம் பகுதி களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போலீசார், ரிசர்வ் பட்டாலியன் படையினர், ஐ.ஆர்.பி.என். உட்பட ஆயிரத்து 500-க்கும் மேற் பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுவையில் மத்திய மந்திரி வருகையையொட்டி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.