மத்திய மந்திரி அமித்ஷா புதுச்சேரி வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி காவல் துறைக்கு ஜனாதிபதியின் உயரிய வண்ண விருது அறிவிக்கப்பட்டது. காவல் துறையின் நீண்ட கால சிறப்பான சேவை, ஒழுக்கம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள காவலர் மைதானத்தில் வருகிற (சனிக்கிழமை) மாலை நடைபெற இருந்தது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு விருதை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மத்திய மந்திரி அமித்ஷா புதுச்சேரி வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, மத்திய மந்திரி அமித்ஷா புதுச்சேரி வருகை திடீரென ரத்தாகியுள்ளது. மாற்று தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றனர்.
முன்னதாக, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ந்தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.
கடந்த 20-ந்தேதி போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணி பெரிய வன்முறையில் முடிந்தது. இந்த விவகாரத்தை முன்னெடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் நடத்திய போராட்டம் பா.ஜ.க.வுக்கு பெரிய சவாலாக அமைந்தது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லியில் நடைபெற்று வரும் நீட் தேர்வு வினாத்தாள் வெளியான பிரச்சனை தொடர்பான போராட்டம் காரணமாக மத்திய மந்திரி அமித்ஷாவின் புதுச்சேரி வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.