தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்து உள்ளது. இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை மாலை 3.15 மணிக்கு தனி விமானத்தில் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். பின்னர் மாலை 3.20 மணிக்கு தனி ஹெலிகாப்டரில் புதுச்சேரி மாநிலம் புறப்பட்டு செல்கிறார்.
புதுச்சேரி மாநிலத்தில் நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். பின்னர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 6.10 மணிக்கு மீண்டும் சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். விமான நிலையத்தில் இருந்து வெளியில் வராமல், பழைய விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் தங்கும் அறையில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.
அப்போது தமிழக பா.ஜ.க. தலைவர்கள் அவரை சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அமித்ஷா, தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
இதேபோல் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் நாளை காலை 10 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அவரை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வரவேற்கின்றனர்.
பின்னர் பழைய விமான நிலையத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் தங்கும் அறையில், காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு அவர், 12 பேர் பயணிக்க கூடிய மினி விமானத்தில் சென்னையில் இருந்து தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க புதுச்சேரி மாநிலம் புறப்பட்டு செல்கிறார். அதன் பின்பு ராகுல் காந்தி சென்னைக்கு திரும்பி வரும் நிகழ்ச்சி எதுவும் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 முக்கிய தலைவர்கள் வருவதையொட்டி சென்னை பழைய விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு அதிகாரிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் எத்தனை பிரமுகர்கள், பழைய விமான நிலையத்தின் உள்ளே வருவதற்கு பாஸ்கள் வழங்குவது? பாதுகாப்பு ஏற்பாடுகளை எவ்வாறு செய்வது? என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.