புதுச்சேரி

கூட்டணி கணக்கு மட்டும் வெற்றியை தராது- எதிர் கட்சிகளுக்கு உணர்த்திய அரசியல் பாடம்

தமிழக கூட்டணியே புதுச்சேரியிலும் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் ஒரு தெளிவான செய்தியை எதிர்கட்சிகளுக்கு சொல்கிறது. கூட்டணி கணக்கு வெற்றியை தராது. மக்களிடம் தினமும் நிற்கும், பூத் வரை ஆள் வைத்திருக்கும் கட்சிக்கே வெற்றி.

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் நடந்து முடிந்த இடைத்தேர்தலை எதிர்கால அரசியல் கூட்டணியின் பலத்தை அறியும் தேர்தலாகவே புதுச்சேரி எதிர்கட்சிகள் பார்த்தன.

ஆனால் தமிழகத்தில் தற்போது உருவாகி உள்ள த.வெ.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை அப்படியே புதுச்சேரியில் இறக்கினால் வெற்றி கிடைத்து விடுமா? என்ற கேள்விக்கு, கள நிலவரம் ‘இல்லை’ என்றே பதில் சொல்லி உள்ளது.

இந்தியா கூட்டணி

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணியாக புதுச்சேரி சட்டசபை தேர்தலை சந்தித்தன. ஆனால், கூட்டணியில் ஒருங்கிணைப்பு இல்லாததால் தி.மு.க. போட்டியிட்ட தேர்தலில் காங்கிரஸ் நட்பு போட்டியாக வேட்பாளர்களை நிறுத்தியது.

அதோடு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு சீட் தர முன்வராததால் அவர்களும் தனியாக போட்டியிட்டனர். இதனால் புதுச்சேரி சட்டசபை பொது தேர்தலிலேயே இந்தியா கூட்டணி கலகலத்து போனது.

சட்டசபை தேர்தல்

அதேநேரத்தில் தேர்தல் முடிவுகளில் நட்பு போட்டி காங்கிரசுக்கு "கை" கொடுப்பதற்கு பதிலாக காலை வாரியது. இதனால் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பெரும் சரிவை சந்தித்து ஊசுடு தனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், தி.மு.க. 5 தொகுதிகளை கைப்பற்றி எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றது.

ஆனால், தேர்தலுக்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. தமிழக இந்தியா கூட்டணியில் இடம் பெற்ற அனைத்து கட்சிகளும் வெளியேறி த.வெ.க. தலைமையிலான இந்தியா கூட்டணியையும், ஆட்சியையும் உருவாக்கின.

தமிழக கூட்டணி

தமிழக கூட்டணியே புதுச்சேரியிலும் தொடரும் என அறிவிக்கப்பட்டது. த.வெ.க.வின் செல்வாக்கு புதுச்சேரி இடைதேர்தலில் "கை" கொடுக்கும் என காங்கிரஸ் கருதியது. ஏனெனில் மாநில கட்சியான நேயம் மக்கள் கழகத்துடன் கூட்டணி அமைத்து புதுச்சேரி சட்டசபை பொது தேர்தலில் போட்டியிட்ட த.வெ.க. 2 தொகுதிகளை வென்றது.

இடைதேர்தல்

அதோடு போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் கணிசமான வாக்குககளும் பெற்றது. இடைதேர்தல் நடந்த தட்டாஞ்சாவடி தொகுதியில் த.வெ.க.வின் கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகம் போட்டியிட்டது. பொதுத்தேர்தலில் நேயம் வேட்பாளர் விநாயகம்-5,483 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கிய மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. 2,990 வாக்குககள் பெற்றார். வெற்றி பெற்ற முதலமைச்சர் ரங்கசாமி 10,044 வாக்குகள் பெற்றார்.

இதனால் தொகுதியில் பொதுதேர்தல் மூலம் அறிமுகமான வேட்பாளர் விநாயகத்தை களம் இறக்கினால் ரங்கசாமியின் கோட்டையை அசைக்கலாம் என காங்கிரஸ் கருதியது. த.வெ.க.வும் கூட்டணியில் இருப்பது பெரும் பலம் என காங்கிரசார் கணக்கிட்டனர்.

அரசியல்

ஆனால், எப்போதுமே அரசியலில் 2+3= 5 என்பதற்கு பதிலாக 2ஆகும் வாய்ப்பும் உள்ளது. அதுதான் தட்டாஞ்சாவடி இடைதேர்தலிலும் நடந்தது. த.வெ.க., விடுதலை சிறுத்தைகள் ஆதரவுடன் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட விநாயகம் 4,876 வாக்குகள் மட்டுமே பெற்றார். இது கடந்த பொதுதேர்தலில் விநாயகம் பெற்ற வாக்குககளை விட 607 வாக்குகள் குறைவாகும்.

அதேநேரத்தில் முதலமைச்சர் ரங்கசாமி பொதுதேர்தலில் பெற்ற 10,024 வாக்குகளை விட கூடுதலாக 3334 வாக்குகள் அசோக் ஆனந்த் பெற்றார். அசோக் ஆனந்த் பெற்ற வாக்கு 13,358. இதுபதிவான வாக்குககளில் 61 சதவீத மாகும்.

காங்கிரஸ்

அதோடு காங்கிரஸ் தவிர்த்து தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. உள்ளிட்ட 9 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். இதற்கு புதுச்சேரி அரசியலும், மக்களின் மனோநிலையும் பிரத்யோகமானது என்பதும் காரணமாகும். மாநிலம் முழுவதும் எதிரொலிக்கும் பிரச்சினைகளை விட தொகுதி பிரச்சினையே தேர்தல்களில் அதிகம் எதிரொலிக்கும்.

தட்டாஞ்சாவடி தொகுதி

தட்டாஞ்சாவடி தொகுதி அரசு ஊழியர்கள், படித்த நடுத்தர வர்க்கத்தினர், தனியார் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. இங்கு சாதி, மத ஓட்டுகளை விட, வளர்ச்சி பணிகள், குடிநீர், சாலை, சட்டம் ஒழுங்கு போன்ற அடிப்படை பிரச்னைகளே வாக்குகளை தீர்மானித்துள்ளது. அதோடு ஆளும் கட்சிக்கு வாக்களித்தால் தொகுதிக்கு தேவையானது கிடைக்கும் என்ற மனநிலையும் மக்களிடம் இருந்தது.

மேலும் புதுச்சேரியில் த.வெ.க.வுக்கு நிர்வாகிகள் இல்லை. புதுச்சேரியில் த.வெ.க.வுக்கு இன்னும் மாவட்ட தலைவர், தொகுதி செயலாளர், பூத் ஏஜெண்ட் என்ற கட்டமைப்பு முழுமையாக இல்லை. வாட்ஸ்அப் குழுக்களை வைத்து தேர்தலை சந்திக்கவும் முடியாது.

என்.ஆர்.காங்கிரஸ்

இடைத்தேர்தல் என்பது 20 நாட்களில் நடக்கும் வேகமான போர். அதற்கு ஏற்கனவே களத்தில் இருக்கும் கட்சியால் மட்டுமே தாக்கு பிடிக்க முடியும். மறுபுறம என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா - அ.தி.மு.க கூட்டணி வேரூன்றி உள்ளது அரசு திட்டங்களை கொண்டு சேர்க்கும் வலைப்பின்னல் உள்ளது.

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் ஒரு தெளிவான செய்தியை எதிர்கட்சிகளுக்கு சொல்கிறது. கூட்டணி கணக்கு வெற்றியை தராது. மக்களிடம் தினமும் நிற்கும், பூத் வரை ஆள் வைத்திருக்கும் கட்சிக்கே வெற்றி.

புதிய கட்சிகள் கூட்டணியை நம்புவதை விட, முதலில் தங்கள் கட்டமைப்பை அரசியல் கட்சிகள் பலப்படுத்த வேண்டும் என்பதே இந்த தேர்தல் உணர்த்தும் மிகபெரிய அரசியல் பாடமாகும்.

SCROLL FOR NEXT