புதுவையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
வெயிலின் தாக்கத்தினால் அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஒரு வாரம் முன்பே தொடங்கி உள்ளது. தமிழகத்தோடு ஒப்பிடும் போது புதுவையில் குறைவான பாரன்ஹீட் தான் வெப்பம் பதிவாகி வருகிறது.
ஆனால் வெயிலின் தாக்கம் மட்டும் அதிகமாக இருக்கிறது. இதற்கு காற்றில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது தான் காரணம் என கூறப்படுகிறது. தினசரி 95 டிகிரி விகிதம் வெயில் கொளுத்தி வருவதால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத நிலை உள்ளது.
நேற்றைய தினம் புதுவையில் அதிகபட்சமாக 95.54 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. வார இறுதி நாளை கொண்டாட புதுவைக்கு வந்த சுற்றுலா பயணிகள் வெயிலின் தாக்கத்தால் வெளியே நடமாட முடியாமல் ஒட்டல்கள் மற்றும் விடுதிகளிலேயே முடங்கினர்.
மாலை 5 மணிக்கு வெயில் தாக்கம் குறைந்த பிறகு அவர்கள் வெளியே வந்தனர். பொதுமக்கள் உடல் சூட்டை தணிக்க இளநீர் பழச்சாறு, நுங்கு, வெள்ளரி, தர்பூசணி கடைகளுக்கு படையெடுத்தனர்.
இந்த நிலையில் வரும் மே 4-ந் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. இதனால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் புதுவை மக்கள் பீதியடைந்துள்னர்.