புதுச்சேரி

வாக்கு எண்ணும் மையத்திற்குள் முகவர்கள் செல்போன் கொண்டு வர அனுமதி இல்லை- மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவிப்பு

தேர்தல் நடத்தும் அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் வேட்பாளர் சமர்ப்பித்த படிவம் 18ஐ வைத்திருப்போர் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர்.

புதுச்சேரி மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த 9-ந்தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ந்தேதி நடக்கிறது. புதுச்சேரி பிராந்தியத்தில் லாஸ்பேட்டையில் அமைந்துள்ள மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லூரி, மகளிர் பொறியியில் கல்லூரி, தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், மாஹேவில் உள்ள ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலை பள்ளியிலும், ஏனாமில் டாக்டர் எஸ்.ஆர்.கே அரசு கலை கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

வேட்பாளர்கள், நேர்மையான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை உறுதிப்படுத்தும் பொருட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று மையத்தில் உள்ள ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு எண்ணும் முகவரை நியமிக்கலாம். மேலும் வேட்பாளர் அல்லது தேர்தல் முகவர் இல்லாத நேரத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியின் மேஜையில் நடைபெறும் எண்ணிக்கையைப் பார்வையிட மேலும் ஒரு எண்ணும் முகவரை நியமிக்கலாம்.

வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம், எண்ணும் முகவரை நியமிக்கும் விண்ணப்பப் படிவத்தை (படிவம்18) பெற்று தாங்கள் நியமிக்க விரும்பும் எண்ணும் முகவரின் விபரங்களைப் பூர்த்தி செய்து, வேட்பாளர் அல்லது வேட்பாளரின் தேர்தல் முகவர் மற்றும் எண்ணும் முகவர் கையொப்பமிட்டு தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளுக்கு 3 நாள்கள் முன்னதாக, அதாவது மே 1-ந்தேதி மாலை 5 மணிக்குள், சமர்ப்பித்து அடையாள அட்டை பெற வேண்டும்.

மேலும், எண்ணும் முகவர்கள், இந்த அடையாள அட்டை மற்றும் நியமன படிவத்தின் மற்றொரு நகலையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று, எண்ணிக்கைக்குக் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாக வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

வேட்பாளர் ஒரே விண்ணப்ப படிவத்தில் அனைத்து எண்ணும் முகவரையும் நியமிக்கலாம். ஆனால், அனைத்து முகவர்களும் அதில் கையொப்பமிட வேண்டும். அனைத்து முகவர்களும் இதன் நகலை வாக்கு எண்ணிக்கை நாளன்று கொண்டுவர வேண்டும்.

மேலும், வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு வரை, வேட்பாளர் அல்லது அவரது தேர்தல் முகவர், ஏற்கனவே நியமித்த எண்ணும் முகவரை திரும்ப பெற விண்ணப்ப படிவத்தை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சமர்ப்பிக்கலாம். அதற்கு மாற்றாக வேறொரு எண்ணும் முகவரையும் நியமிக்கலாம்.

தேர்தல் நடத்தும் அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் வேட்பாளர் சமர்ப்பித்த படிவம் 18ஐ வைத்திருப்போர் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்குள், எண்ணும் முகவர்கள் தங்களுடன், தலைமை வாக்குச்சாவடி அதிகாரியால் வாக்குப்பதிவு நாளன்று வழங்கப்பட்ட படிவம் 17ன் நகல், பேனா, பென்சில் மற்றும் வெள்ளை காகிதம், நோட்பேட் மட்டுமே கொண்டுவர அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், எண்ணும் முகவர்கள் செல்போன் அல்லது வேறு எந்த மின்னணு சாதனங்களையும் கொண்டு வர அனுமதியில்லை.

ஆகவே, வேட்பாளர்கள் மேற்கூறிய நடைமுறைகளை பின்பற்றி புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையை அமைதியான முறையில் நடத்த ஒத்துழைக்க வேண்டும்

இவ்வாறு குலோத்துங்கன் கூறியுள்ளார்.