புதுச்சேரி

இலங்கை சிறையிலிருக்கும் காரைக்கால் மீனவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு ரங்கசாமி கடிதம்

மீனவர் பிரதீப் சூரியமூர்த்தியை விரைவில் விடுவிப்பதற்கு இலங்கை அரசுடன் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கைது

10.4.26 அன்று கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த 7 மீனவர்களையும் கைது செய்து அவர்களது எந்திரப் படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக 13.4.2026 அன்று தேதியிட்டு முந்தையக் கடிதம் எழுதியிருந்தேன்.

தவிப்பு

இதில் காரைக்கால் டி.ஆர். பட்டினத்தைச் சேர்ந்த பிரதீப் சூரியமூர்த்தி (29) என்பவரைத் தவிர, 6 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். பிரதீப் சூரிய மூர்த்திக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆகியுள்ளது.

தொடர்ச்சியாக மருந்துகள் தேவைப்படும் வயதான பெற்றோர் அவருக்கு உள்ளனர். மேலும் அவர்களைப் பராமரிக்க வேறு குடும்ப உறுப்பினர்களும் இல்லை.

மீட்க நடவடிக்கை

எனவே மீனவர் பிரதீப் சூரியமூர்த்தியை விரைவில் விடுவிப்பதற்கு இலங்கை அரசுடன் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்-மந்திரி ரங்கசாமி குறிப்பிட்டுள்ளார்.