புதுச்சேரி

புதுவையில் 3 அமைச்சர்கள் இன்று பதவி ஏற்றனர்- கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அமைச்சர்களை நியமிக்க மத்திய உள்துறை மூலம் ஜனாதிபதியின் ஒப்புதலை பெற வேண்டும். இதன்படி, புதிய அமைச்சர்கள் நியமனத்திற்கு மத்திய உள்துறை மூலம் ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டது.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் முதலமைச்சர் உள்பட 6 அமைச்சர்கள் பதவி உள்ளது.

புதுவை சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 16 தொகுதிகளை கைபற்றுபவர்கள் ஆட்சி அமைக்க முடியும். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்ஆர்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக லஜாக ஆகிய கட்சிகள் தலா 1 என 18 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது.

தேர்தல் முடிவு வெளியான 9 நாட்களுக்குப் பிறகு ரங்கசாமி முதல்-அமைச்சராகவும். பாஜகவை சேர்ந்த நமச்சிவாயம், என்ஆர். காங்கிரசை சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அமைச்சர்களாக கடந்த மே மாதம் 13ந்தேதி பதவி ஏற்றனர்.

பதவியேற்ற 2 அமைச்சர்களுக்கும் இதுவரை இலாகா ஒதுக்கப்படவில்லை. தேர்தல் ஒப்பந்தப்படி முதல்-அமைச்சர் உள்பட 4 அமைச்சர்கள் என்ஆர். காங்கிரசுக்கும், 2 அமைச்சர்கள் பதவி பாஜகவுக்கும் பிரிக்கப்பட்டது.

இதன்படி என்.ஆர்.காங்கிரசில் 2, பாஜகவில் ஒரு அமைச்சர் பதவி ஏற்க வேண்டும். இதற்காக கடந்த 3-ந்தேதி 3 அமைச்சர்கள் பட்டியலை கவர்னர் கைலாஷ்நாதனிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார். இதில் என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த ராஜவேலு, சிவக்கொழுந்து, பாஜகவைச் சேர்ந்த ராஜசேகர் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அமைச்சர்களை நியமிக்க மத்திய உள்துறை மூலம் ஜனாதிபதியின் ஒப்புதலை பெற வேண்டும். இதன்படி, புதிய அமைச்சர்கள் நியமனத்திற்கு மத்திய உள்துறை மூலம் ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டது.

இதையடுத்து புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா இன்று பழைய கவர்னர் மாளிகை வளாகத்தில் நடந்தது. இதற்காக அங்கு மேடை அமைக்கப்பட்டு இருந்தது. காலை 9.10 மணிக்கு கவர்னர் கைலாசநாதன் மேடைக்கு வந்தார். தொடர்ந்து வந்தே மாதரம், தேசிய கீதம், தமிழ் தாய் வாழ்த்து ஆகியவை பாடப்பட்டது.

இதனையடுத்து தலைமைச் செயலாளர் சரத் சவுகான் புதிய அமைச்சர்கள் நியமனத்திற்கு ஜனாதிபதி அனுமதி அளித்த ஒப்புதல் கடிதத்தை வாசித்தார். தொடர்ந்து பதவியேற்பு விழா நடந்தது. அமைச்சர்களாக ராஜவேலு, சிவக்கொழுந்து, ராஜசேகர் ஆகியோர் பதவியேற்றனர்.

அவர்களுக்கு கவர்னர் கைலாஷ்நாதன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் கைலாஷ்நாதன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இதனையடுத்து வந்தே மாதரம், தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.

விழாவில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், தற்காலிக சபாநாயகர் அன்பழகன், செல்வகணபதி எம்பி, என்ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திருமுருகன், ஆறுமுகம், வையாபுரி மணிகண்டன், ரவிக்குமார், டாக்டர் நாராயணசாமி, மோகன்தாஸ், பாஜக எம்எல்ஏக்கள் ஜான்குமார், மீனாட்சி சுந்தரம், திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், செந்தில்குமார், கார்த்திகேயன், காங்கிரஸ் எம்எல்ஏ கார்த்திகேயன், தவெக எம்எல்ஏக்கள் சாய் சரவணகுமார், ராமு, சுயேச்சை எம்எல்ஏக்கள் டாக்டர் விக்னேஸ்வரன், அழகானந்தம், முன்னாள் அமைச்சர் லட்சுமி நாராயணன், பாஜக மாநில தலைவர் ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏக்கள் பாஸ்கர், செல்வம், என்ஆர்.காங்கிரஸ் மாவட்ட தலைவர் பாலமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.