புதுவையில் கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.
தேர்தல் செயல்முறை மே 6ந் தேதி வரை நடைமுறையில் இருக்கும். புதுவையில் தேர்தலையொட்டி மதுபான விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் துறை விதித்துள்ளது. அனைத்து சில்லறை, மொத்த மதுபான கடைகள், சாராயம், கள்ளுக்கடைகள் மறு உத்தரவு வரும் வரை இரவு 10 மணிக்கு கடைகளை மூட வேண்டும்.
குடோன்களில் இருந்து மதுபானங்களை காலை 10 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். உத்தரவுகளை மீறினால் கலால் சட்டம், விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் துறை உத்தரவிட்டுள்ளது. தினமும் மதுபான விற்பனையை கணக்கு காட்ட வேண்டும்,
அனைத்து கடைகளிலும் சிசிடிவி கேமரா வைக்க வேண்டும் என்ற விதி பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு நாளை மறுநாள் நடைபெறுவதையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நேற்று இரவு உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் மது பாட்டில்களை வாங்கி சென்றனர். மதுகடைகளில் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு அனைத்து மதுபான கடைகளுக்கு கலால் துறையினர் சீல் வைத்தனர். மதுபான குடோன்களுக்கு நேற்று மாலை 5 மணிக்கு சீல் வைத்தனர்.
புதுவையில் மட்டும் 453 மதுபான கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மீறி மதுபானங்கள் விற்பனை செய்தால் அவை பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலால்துறை எச்சரித்துள்ளது.
புதுவையில் 19 எல்லைகளில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் மதுபான நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. கலால் துறையில் வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு அறையில் மதுபான கடைகள், குடோன்கள், 19 எல்லைகள் 24 மணிநேரமும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்று கலால்துறை தாசில்தார் ராஜேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.