புதுச்சேரி

நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை: புதுச்சேரியின் 4 பிராந்தியங்களில் பாதுகாப்பு பணியில் 2,600 போலீசார்

புதுச்சேரியில் 3 ஷிப்டுகளில் ஆயிரத்து 250 போலீசார் ஓட்டு எண்ணும் மையம், சுற்றுப்புற பகுதிகள், நகர, புறநகர் மற்றும் கிராம பகுதியில் பணியில் உள்ளனர்.

புதுவை மாநில சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு கடந்த ஏப்ரல் 9-ந்தேதி நடந்தது.

புதுவையில் 23 தொகுதிகளின் வாக்கு பதிவு எந்திரங்கள் லாஸ்பேட்டை அரசு பெண்கள் பொறியியல் கல்லுாரி, நேரு பாலிடெக்னிக் கல்லூரி, தாகூர் அரசு கலைக்கல்லூரி ஆகிய 3 இடங்களிலும், காரைக்காலில் 5 தொகுதி வாக்கு பதிவு எந்திரங்கள் கருணாநிதி பட்டமேற்படிப்பு மையத்திலும், மாகியில் அரசு மேல் நிலைப்பள்ளியிலும், ஏனாமில் அரசு கலைக்கல்லுாரியிலும் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

ஓட்டு எண்ணிக்கையும் இந்த மையங்களில் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கையையொட்டி புதுவையின் 4 பிராந்தியங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.

ஓட்டு எண்ணிக்கை நாளான நாளை மறுநாள் திங்கட்கிழமை புதுச்சேரியில் 3 ஷிப்டுகளில் ஆயிரத்து 250 போலீசார் ஓட்டு எண்ணும் மையம், சுற்றுப்புற பகுதிகள், நகர, புறநகர் மற்றும் கிராம பகுதியில் பணியில் உள்ளனர்.

அதிகாலை 5 மணி முதல் மதியம் ஒரு மணி வரை முதல் ஷிப்ட், மதியம் ஒரு மணி முதல் இரவு 9 மணி வரை 2வது ஷிப்ட், இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை 3வது ஷிப்ட் என போலீசாருக்கு பாதுகாப்பு பணி பிரித்து தரப்பட்டுள்ளது. இவர்களோடு 200 துணை ராணுவத்தினரும் பணியில் இருப்பார்கள்.

காரைக்காலில் 500, மாகேவில் 400, ஏனாமில் 450 போலீசாரும், அவர்களோடு தலா 100 துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இவர்களோடு சிறப்பு அதிரடிப்படையினர், பெண் கமாண்டோக்களும் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஆலோசனை கூட்டம் ஆசிரம கருத்தரங்கு மையத்தில் நடந்தது. தேர்தல் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமை வகித்தார். டிஐஜி சத்தியசுந்தரம், சீனியர் எஸ்பி கலைவாணன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பல்வேறு அறிவுறுத்தல்களையும், ஆலோசனைகளையும் வழங்கினர்.