புதுச்சேரி:
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் 126 ஏழைக் குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கான மானியம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு, மானியத்தை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடையே பேசியதாவது:-
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் புதுச்சேரி மாநிலம் குடிசையில்லா மாநிலமாக உருவாகும். மொத்தம் உள்ள 30 தொகுதிகளிலும் இதுவரை 3843 குடும்பங்கள் இந்த திட்டத்தின்கீழ் இணைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இதில், இன்று முதல் தவணையாக தலா 70 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள மானியம் கட்டுமானப் பணியின்போது வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.