சேதராப்பட்டு:
புதுவை அருகே தமிழக பகுதியான இரும்பை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அமைந்துள்ள கூட்டுறவு சங்கத்தில் இரும்பை, துருவை, கோட்டக்கரை மற்றும் இடையன்சாவடி ஆகிய கிராமங்களில் 1918 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த கூட்டுறவு சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த தேர்தலுக்கான மனுதாக்கல் இன்று காலை நடந்தது.
காலை 10 மணிக்கு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவரும், டி.டி.வி. தினகரன் அணியை சேர்ந்த வானூர் ஒன்றிய செயலாளருமான விசுவநாதன் தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு பெற கூட்டுறவு சங்கத்துக்கு வந்தார்.
அப்போது அங்கிருந்த தேர்தல் நடத்தும் அதிகாரியான கோபாலகிருஷ்ணன் விண்ணப்பம் வினியோகம் முடிந்துவிட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதேவேளையில் அ.தி.மு.க.வை சேர்ந்த சிலர் கையில் விண்ணப்பங்களை வைத்திருந்தனர். இதனை கண்ட விசுவநாதன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விண்ணப்பங்களில் அரசு முத்திரை இல்லாமல் அமைச்சர் வழங்கிய விண்ணப்பங்களை அ.தி.மு.க.வினர் தாக்கல் செய்துள்ளதாக குற்றம் சாட்டினர். இதனால் அ.தி.மு.க. வினர் ஆவேசம் அடைந்து டி.டி.வி. தினகரன் அணியினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கோட்டக்குப்பம் துணைபோலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இரு தரப்பினரையும் போலீசார் சமாதானப்படுத்தினர். ஆனால் டி.டி.வி. தினகரன் அணியை சேர்ந்த வானூர் ஒன்றிய செயலாளர் விசுவநாதன் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால் ஒரு கட்டத்தில் அவரை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்று அப்புறப்படுத்தினர்.
பின்னர் சிறிது நேரம் கழித்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி விசுவநாதனுக்கு வேட்புமனு விண்ணப்பத்தை பெற்று கொடுத்தனர். அதன்பிறகு அங்கு அமைதி நிலவியது.