புதுச்சேரி 
செய்திகள்

புதுச்சேரி: ஆளுநர் இல்லாமல் சட்டசபை கூட்டத்தொடர்?

புதுச்சேரியில் நாளை நடைபெறவுள்ள சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை இடம்பெறாது எனத் தகவல் வெளியாகியுள்ளது

மாலை மலர்

புதுச்சேரி:

அரசு செலவினங்களுக்காக கடந்த மார்ச் மாதம் 3 மாதங்களுக்கான (ஏப்ரல், மே, ஜூன்) இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான அனுமதி காலம் முடிந்ததையடுத்து முழு பட்ஜெட் தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. நீண்ட இழுபறிக்குப் பின் பட்ஜெட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் கவர்னர் உரையுடன் தொடங்க உள்ளது. முதல்-அமைச்சர் நாராயணசாமி ரூ.9 ஆயிரம் கோடிக்கு 2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதையொட்டி நேற்று மதியம் 12 மணியளவில் சட்டசபை வளாகம் 4-மாடியில் உள்ள கருத்தரங்க கூடத்தில் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.

புதுவை மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை மனதில் வைத்து முக்கிய அறிவிப்புகள், சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்பதால் இந்த பட்ஜெட் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி பேரவையில் நாளை தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை இடம்பெறாது என தகவல் வெளியாகியுள்ளது.  தனது ஒப்புதல் இல்லாமல் உரை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறி கோப்பை ஆளுநர் திருப்பி அனுப்பிதாக வெளியான தவலை அடுத்து நாளை நடைபெறும் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை இடம்பெறாது என தகவல்.

மேலும் ஆளுநர் உரை இல்லாமல் புதுச்சேரி சட்டசபை பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்வார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.