செய்திகள்

புதுச்சேரி பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் நியமனம் விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு

புதுச்சேரி பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நியமனம் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பா.ஜ.கவைச் சேர்ந்த சாமிநாதன், செல்வ கணபதி மற்றும் சங்கர் ஆகிய 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக நியமித்து ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டு, கடந்தாண்டு ஜூலை மாதம் அவர்களுக்குப் பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். 

ஆனால், அவர்கள் நியமனத்தை ஏற்க மறுத்த சபாநாயகர், நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு மாத ஊதியம் அளிக்க தடை விதித்தார். இதையடுத்து, ஆளுநரின் இந்த நியமனத்துக்கு தடை விதிக்கக் கோரி புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ. லெட்சுமி நாராயணன் தொடர்ந்த வழக்கு, ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவினை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு, சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கக் கோரி நியமன எம்.எல்.ஏ.-க்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு என 3 வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்த இந்த வழக்குகளில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

அரசியலமைப்புச் சட்ட அதிகாரத்தின் படியே 3 பேரின் நியமனம் நடைபெற்றுள்ளது. எனவே, அவர்கள் பேரவைக்குள் செல்வதைத் தடுக்க முடியாது. அவர்கள் நியமனம் செல்லும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளோம் என சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், சென்னை ஐகோர்ட் அளித்துள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும் என்ற தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். #Tamilnews