புதுச்சேரி:
புதுவை உப்பளம் ஜீவானந்தம் தெருவை சேர்ந்தவர் சந்தன் (வயது 49). இவர் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்தில் ஏ.இ.யாக வேலை செய்து வருகிறார்.
இவரது வீடு 3 மாடிகளை கொண்டது. அதில் தரை தளத்தில் சந்தனின் தாயார் வசித்து வந்தார். முதல் மாடியை வாடகைக்கு விட்டிருந்தனர். 2-வது மாடியில் சந்தன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று சந்தன் வேலைக்கு சென்று விட்டார். இவரது மனைவி - மகனுக்கு உணவு கொடுப்பதற்காக வீட்டை பூட்டாமல் தரை தளத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வந்து விட்டார்.
அங்கு மகனுக்கு உணவு கொடுக்கும் போது மோட்டார் சைக்கிளில் ஒருவர் வீட்டுக்கு வந்தார். அவர் மெயின் கதவை பூட்டாமல் அப்படியே மாடிக்கு சென்றார்.
சிறிது நேரம் கழித்து கீழே இறங்கி வந்த அவர் மறுபடியும் கதவை திறந்து போட்டு விட்டு வெளியே சென்றார். அவரை சந்தன் மனைவி அழைத்து ஏன் கதவை பூட்டாமல் செல்கிறீர்கள்? என்று கேட்டு சத்தம் போட்டு அனுப்பினார்.
சிறிது நேரம் கழித்து சந்தன் மனைவி மேலே சென்று பார்த்த போது, பீரோ கதவு திறந்துகிடந்ததை கண்டு அதிர்ச்சிஅடைந்தார். மேலும் பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.19 ஆயிரத்து 500-ஐ காணவில்லை.
அதேபோல் ஜீவானந்தம் தெருவின் பின்புறம் உள்ள மற்றொரு வீட்டிலும் கொள்ளை நடந்தது. அங்குள்ள வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் முகமது ஜலின் (60). இவர் பழைய பஸ் நிலையத்தில் டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
காலையில் முகமது ஜலின் கடைக்கு சென்று விட்டார். அவரது மகன் பள்ளிக்கும், மகள் கல்லூரிக்கும் சென்று விட்டனர். வீட்டில் யாரும் இல்லை.
மதியம் 2 மணிக்கு கல்லூரி சென்ற மகள் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோ திறந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து தந்தை ஜலினுக்கு தகவல் கொடுத்தார்.
அவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது, பீரோவில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை.
இதை அறிந்த ஒதியஞ்சாலை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கொள்ளை நடந்த இரு வீட்டிலும் விசாரணை நடத்தினர். இரு வீட்டிலும் கொள்ளையில் ஈடுபட்டது ஒரே நபராக இருக்கலாம் என்றும் சந்தே கிக்கப்படுகிறது. மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீசார் அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து இரு வீட்டாரும் ஒதியஞ்சாலை போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.