செய்திகள்

பொதுமக்கள் ஆதரவளித்தால் அரசியல் கட்சி தொடங்குவேன் - வீரப்பன் மனைவி

பொதுமக்கள் ஆதரவளித்தால் அரசியல் கட்சி தொடங்குவேன் என்று வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கூறியுள்ளார்.#muthulakshmi #cauveryissue

மாலை மலர்

வாழப்பாடி:

மண் காக்கும் வீர தமிழர் பேரமைப்பு என்ற பெயரில் அரசியல் சார்பற்ற இயக்கத்தை தொடங்கி உள்ள சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, தமிழகம் முழுவதும் அவரது இயக்கத்திற்கு உறுப்பினர் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று மாலை வாழப்பாடி பகுதியில் உறுப்பினர் சேர்க்கைக்காக வந்திருந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது கணவர் வீரப்பன் உயிரோடு இருக்கும் போது ஒரு கேசட்டில் பேசி அதை வெளியிட்டாலே, கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டனர். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு பிறகு தற்போதைய ஆட்சி நிர்வாகம் சரியாக இயங்கவில்லை.

உச்சநீதி மன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தமிழக விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தமிழகம் மற்றும் கர்நாடக மாநில சிறைகளில் வீரப்பன் கூட்டாளிகள் அடைபட்டு கிடக்கின்றனர்.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உச்ச நீதி மன்றத்தில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக, கர்நாடக சிறையில் அடைபட்டு கிடக்கும் 3 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

தமிழக சிறையில் இருப்பவர்களையும் விடுதலை செய்ய மாநில அரசு முன்வர வேண்டும். சிறை தண்டனையை அனுபவித்து வரும் வீரப்பன் கூட்டாளிகள், வயது முதிர்ந்த காலத்திலாவது குடும்பம், உறவுகளோடு வாழ்வதற்கு ஆவன செய்ய வேண்டும்.

மக்கள் ஆதரவளித்தால் மண் காக்கும் வீர தமிழர் பேரமைப்பு இயக்கத்தோடு, அரசியல் கட்சியையும் தொடங்கி மக்கள் பணி யாற்றுவேன். எனது ஆயுள் முடிவதற்குள் எனது கணவர் வீரப்பனுக்கு அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் அமைத்தே தீருவேன்.

இவ்வாறு அவர் கூறினார். #muthulakshmi #cauveryissue