செய்திகள்

குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

அத்தியூர் இந்திரா நகரில் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அடுத்துள்ள அத்தியூர் கிராமத்தில் இந்திரா நகர் உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி பொதுமக்களுக்காக அங்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அப்பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பலமுறை வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை அத்தியூர் இந்திரா நகர் பஸ்நிறுத்தம் அருகே உள்ள அகரம் சீகூர் சாலையில் சீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, வருவாய் ஆய்வாளர் வெங்கடாசலம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அதிகாரிகள் சீராக குடிநீர் வழங்க உரிய அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அகரம் சீகூர் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT