செய்திகள்

திருவொற்றியூரில் மீனவ கிராமங்களில் எண்ணெய் குழாய் பதிக்க பொதுமக்கள் எதிர்ப்பு: அதிகாரிகளுடன் வாக்குவாதம்

திருவொற்றியூரில் மீனவ கிராமங்களில் எண்ணெய் குழாய் பதிக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மாலை மலர்

திருவொற்றியூர்:

சென்னை துறைமுகத்தில் இருந்து மணலியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான சி.பி.சி.எல்.-க்கு எண்ணெய் குழாய் பதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சுமார் 17 கி.மீட்டர் தூரத்துக்கு பதிக்கப்படும். இந்த குழாய்கள் காசிமேடு, ராயபுரம், திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட 24 மீனவ கிராங்கள் வழியாக செல்கிறது.

எண்ணெய் குழாய் பதிக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கூறி மீனவ கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று காலை திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடைக்குப்பம் பகுதியில் எண்ணெய் குழாய் பதிப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் சி.பி.சி.எல். பொது மேலாளர் புருசோத்தமன், முன்னாள் எம்.எல்.ஏ. குப்பன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இது பற்றி அறிந்ததும் மீனவ கிராம மக்கள், பெண்கள் உள்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் எண்ணெய் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கூடுதல் கமி‌ஷனர் ஜெயராமன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மீனவ மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

ஆனால் கிராம மக்கள் எண்ணூர் கடற்கரை சாலையில் தொடர்ந்து திரண்டு உள்ளனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டு உள்ளது. 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே பூமி பூஜை முடிந்து அப்பகுதியில் ராட்ச எண்ணெய் குழாய்களை பதிக்கும் பணி தொடங்கியது. மீனவ கிராம மக்களை பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் அழைத்து உள்ளனர். இன்று மாலை பேச்சுவார்த்தை நடக்கும் என்று தெரிகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, “மீனவ கிராமங்களில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் எண்ணெய் குழாய் பதிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை” என்றனர்.