லக்னோ:
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பரவலாக போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதில், உத்தர பிரதேசத்தில் நடந்த போராட்டத்தின்போது பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. வன்முறையின்போது பொது சொத்துக்கள் சூறையாடப்பட்டன. அரசு வாகனங்கள் உள்ளிட்ட பொது சொத்துக்களை தீ வைத்தும் கொளுத்தினர்.
இந்த வன்முறை போராட்டம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டத்தின்போது பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து விற்று, அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் ஈடு செய்யப்படும்’ என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். அதன்படி, ரூ.50 லட்சம் மதிப்புடைய பொதுச்சொத்துக்களின் சேதத்திற்கு இழப்பீடு கேட்டு, 130 பேருக்கு மாவட்ட நிர்வாகங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளன.
இந்நிலையில், போராட்டத்தின்போது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த நபர்களை தகவல் மற்றும் தொடர்புத்துறை அடையாளம் கண்டறிந்துள்ளது.
லக்னோ, மீரட், சம்பல், ராம்பூர், முசாபர்நகர், பிரோசாபாத், கான்பூர் நகர், மாவ் மற்றும் புலந்த்சாகர் ஆகிய பகுதிகளில் நடந்த போராட்டங்களின்போது 498 பேர் வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இதற்கிடையே, குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக, 21 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு வரை இணையதள சேவைகளை அரசு நிறுத்தி வைத்துள்ளது.
பிரோசாபாத்தில் கடந்த 20ம் தேதி நடந்த வன்முறைப் பேராட்டத்திபோது துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உத்தர பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.