தாராபுரம்:
தாராபுரம் கவுண்டச்சி புதூர் ஊராட்சிக்கு உட்பட்டது பாலசுப்பிரமணியம் நகர். இப்பகுதியில் முத்தம்மாள், வேலுச்சாமி, நாகராஜ், நாச்சிமுத்து ஆகியோர் ஆடு வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆடுகளை வழக்கம்போல் மேய்ச்சல் முடிந்ததும் இரவு பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு வந்தனர். நேற்று காலையில் வழக்கம் போல ஆடுகளை மேய்ச்சலுக்கு பட்டியிலிருந்து திறந்துவிட பட்டிக்கு சென்று பார்த்த போது ஆடுகள் சத்தமில்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அருகில் சென்று பார்த்தபோது வெறி நாய்கள் கடித்து குதறிய நிலையில் 4 வெள்ளாடுகள் செத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் வெறிநாய் கடியால் ஆடுகள் இதுபோல் பலியாவதை தடுக்க வேண்டும் என்று அவர்கள் தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமாரிடம் புகார் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர் பவன்குமார் கூறுகையில், வெறிநாய்களை பிடிக்க தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களில் இருந்து இதற்கான பணியாளர்களை வரவழைக்க திட்டமிட்டுள்ளதாகவும் மேலும் இதேபோல் சம்பவம் தாராபுரத்தில் 5 இடங்களில் நடைபெற்றிருப்பதாக புகார் வந்துள்ளது. எனவே இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.