கோவை துடியலூர் அருகே மீனாட்சி கார்டன் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த குடியிருப்பில் 245 வீடுகள் உள்ளன.இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக பெண்களின் உள்ளாடைகள், சுடிதார் மற்றும் செருப்புகள் தொடர்ந்து காணாமல் போனது.
ஒரே நேரத்தில் உள்ளாடைகளும், செருப்பும் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் தேடி பார்த்த போது அதே பகுதியில் உள்ள ஆளில்லாத ஒரு வீட்டில் செருப்புகளும் உள்ளாடைகளும் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் தற்போது கடந்த 4 நாட்களாக மீண்டும் இது போன்று பெண்களின் உள்ளாடைகள், சுடிதார், செருப்பு போன்றவை தொடர்ந்து மாயமானது. இதனையடுத்து குடியிருப்பு வாசிகள் அந்த பகுதியில் பொருத்துப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பெண்கள் அணியும் நைட்டி மற்றும் காலில் கொலுசுடன் வரும் வாலிபர் ஒருவர் பெண்களின் உள்ளாடைகள், செருப்புகள் மற்றும் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டு இருக்கும் கார்களில் உள்ள பொருட்களை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதனை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பகுதி முழுவதும் தேடி பார்த்தனர். அப்போது பெண்களின் உள்ளாடைகள் மற்றும் செருப்புகளை திருடிய சைக்கோ வாலிபர் அவற்றை ஒதுக்குபுறமான ஒரு இடத்தில் போட்டு எரித்தது தெரிய வந்தது. இந்த சைக்கோ வாலிபரின் நடவடிக்கைகள் அச்சம் அளிக்கும் விதமாக இருப்பதாக குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர். சைக்கோ வாலிபரால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமோ என அஞ்சுவதாகவும், வீடுகளில் தனியாக இருப்பதற்கு பயமாக இருப்பதாகவும் குடியிருப்பில் வசிக்கும் பெண்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.
இது குறித்து மீனாட்சி கார்டன் குடியிருப்பு வாசிகள் துடியலூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து பெண்களின் உள்ளாடைகள் மற்றும் செருப்புகளை திருடும் சைக்கோ வாலிபரை தேடி வருகிறார்கள்.