செய்திகள்

கவர்னர் வருகையின்போது கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: பி.ஆர்.பாண்டியன் பேட்டி

ஜனவரி 1-ம் தேதி தஞ்சாவூருக்கு வரும் தமிழக கவர்னருக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்று பி.ஆர். பாண்டியன் கூறினார்.

தஞ்சாவூர்:

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து 4 ஆண்டுகள் நிலவி வரும் வறட்சியாலும், நடப்பாண்டு காலம் கடந்து மேட்டூர் அணை திறக்கப்பட்டதாலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. பருவமழையை நம்பியே சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

டெல்டா மாவட்டங்களில் நெற்கதிர் வளரும் நிலையில் தண்ணீரின்றி பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் தலையீட்டில் சட்டத்துக்கு புறம்பாக செப்டம்பர் மாதம் முதல் தொடர்ந்து விநாடிக்கு 1000 கனஅடி தண்ணீரை சேலம் மாவட்டத்துக்கு விடுவித்ததால் சுமார் 15 டி.எம்.சி அளவுக்கு தண்ணீர் வீணடிக்கப்பட்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்துவிட்டது. இதனால் 15 லட்சம் ஏக்கரில் கதிர் வரும் நிலையில் உள்ள பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதைக் கண்டித்தும் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி கர்நாடகாவிடம் இருந்து தண்ணீரை பெற்றுத் தர தமிழக அரசை வலியுறுத்தியும் முறைகேடின்றி விவசாயிகள் பங்களிப்போடு நீர்நிலைகளை தூர்வார வலியுறுத்தியும் ஜனவரி 1-ம் தேதி தஞ்சாவூருக்கு வரும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இதில் நூற்றுக்கனக்கான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.

மேலும் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 5-ம் தேதி சென்னை கோட்டையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொள்கின்றனர்.

SCROLL FOR NEXT