செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நீதிமன்றம் அருகே நாம் தமிழர் கட்சியினர் திடீர் போராட்டம்

திருச்சி மாவட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நீதிமன்றம் அருகே நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. #Trichy #CauveryManagementBoard

மாலை மலர்

திருச்சி:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் அரசியல் கட்சிகள், விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம், தி.மு.க. தலைமையில் எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம், நடிகர்-நடிகைகள் சார்பில் மவுன போராட்டம் என மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐ.பி.எல். போட்டிகளை தமிழகத்தில் நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், வைரமுத்து, நாம் தமிழர் கட்சிதலைவர் சீமான், எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சி நீதிமன்றம் அருகே நாம் தமிழர் கட்சியினர் இன்று இரவு திடீரென போராட்டம் நடத்தினர்.

நீதிமன்றம் அருகே நாம் தமிழர் கட்சியினர் சுமார் 200க்கு மேற்பட்டோர் ஒன்றுகூடினர். அவர்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தகவலறிந்து அப்பகுதியில் போலீசார் விரைந்து வந்தனர். போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. அந்த பகுதியில் ஏற்பட்டிருந்த போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்தனர்.

#Trichy #CauveryManagementBoard # Tamilnews