செய்திகள்

தடையை மீறி ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணியினர் 47 பேர் கைது

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி நிலக்கோட்டை ஒன்றிய இந்து முன்னணி சார்பில் நிலக்கோட்டை நடராஜர் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை ஒன்றிய இந்து முன்னணி சார்பில், நிலக்கோட்டை நடராஜர் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக இந்து முன்னணி மாநில செயலாளர் முத்துகுமார், ஒன்றிய தலைவர் பரமேஸ்வரன், ஒன்றிய செயலாளர் கருப்பு வைரம், நகர செயலாளர் பிரதாப் ஆகியோர் உள்பட 47 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.