திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள ரெண்டலபாறையை சேர்ந்தவர் குழந்தைராஜ் (வயது50). இவர் சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
அவர்களுக்கு திருமணம் ஆகி தனியாக வசித்து வருகின்றனர். மகன் கென்னடி மில் வேலை பார்த்து வருகிறார். குழந்தை ராஜீக்கு சொந்தமான வீட்டை தனது பெயருக்கு மாற்றி எழுதி தரும்படி கேட்டு வந்தார். ஆனால் குழந்தைராஜ் இதற்கு சம்மதிக்க வில்லை. இதனால் தந்தை, மகனுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் கென்னடி தனது தந்தை என்றும் பாராமல் அவரை உருட்டு கட்டையால் தாக்கினார். மேலும் கென்னடியின் மனைவி ஜெசிந்தாமேரியும் தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயரிழந்தார்.
இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கென்னடி மற்றும் அவரது மனைவி ஜெசிந்தா மேரியை கைது செய்தனர்.