கோவை:
பாரதியார் பல்கலை கழகத்தில் 2016-ம் ஆண்டு பேராசிரியர்கள் பணி நியமனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பல்கலைகழகத்தில் 3 முறை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் இது தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் சிக்கியது.
ஏற்கனவே பணி நியமனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அரசுக்கு பல்வேறு புகார்கள் சென்றன. பேராசியர் பணிக்கு 1462 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே பணி வழங்கியதாக நேர்முக தேர்வில் பங்கேற்றவர்கள் புகார் கூறியிருந்தனர். அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
கவுண்டம்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் நேற்று மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை 3 மணி நேரம் விசாரணை நடந்தது. இதில் 2 மாணவிகள் உள்பட 6 பேரிடம் விசாரணை நடந்தது. நேர்முகத் தேர்வு முடிந்ததும் பணி நியமனத்துக்கு பேரம் பேசினார்களா? நேர்முகத்தேர்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் யார்- யார்? என்னென்ன கேள்விகள் கேட்டார்கள்? என பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.
துணைவேந்தர் கணபதிக்கு இடைத்தரகராக செயல்பட்ட பேராசிரியர்கள், அதிகாரிகள் பற்றி விவரங்கள் கிடைத்தது. இதனடிப்படையில் இடைத் தரகராக செயல்பட்டவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இன்னும் ஓரிரு நாட்களில் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இன்று 2-வது நாளாக மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் அளித்த பதில்கள் இந்த வழக்கில் சேர்க்கப்பட உள்ளது.
பல்கலைகழகத்தில் டாக்டர் பட்டத்துக்கும் மாணவர்களிடம் லட்சக் கணக்கான ரூபாய் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளன. பல்கலை கழகத்தில் உள்ள பல்வேறு துறைகளில் ஏராளமான மாணவர்கள் பி.எச்.டி. படித்து வருகின்றனர்.இவர்கள் பலரிடம் துணைவேந்தர் கணபதி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக கல்வியியல் துறையில் பி.எச்.டி. பட்டம் முடிக்க ஒருவருக்கு ரூ.5 லட்சம் வரை பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சமீபத்தில் பி.எச்.டி. படித்து முடித்தவர்கள் மற்றும் தற்போது படித்து வருபவர்களிடமும் விசாரணை நடத்த உள்ளனர். #tamilnews #professors #student #doctordegree