கோகா:
நாட்டில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என பிரதமர் மோடி கூறினார்.
குஜராத்தின் சவுராஷ்டிரா பிராந்தியத்துக்கு உட்பட்ட கோகாவில் இருந்து தெற்கு குஜராத்தின் தகேஜ் நகருக்கு அரபிக்கடலில் மேற்கொள்ளப்படும் ‘ரோ-ரோ’ படகு போக்குவரத்து திட்டத்துக்கு கடந்த 2012-ம் ஆண்டு அப்போதைய முதல்-மந்திரியான நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.615 கோடியில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தின் முதல் கட்ட பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இந்த படகு சேவை நேற்று தொடங்கியது.
கோகாவில் நடந்த இதற்கான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று படகு போக்குவரத்தை தொடங்கி வைத்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘இந்தியாவில் மட்டுமின்றி தென்கிழக்கு ஆசியாவிலேயே இது மாதிரியான படகு போக்குவரத்து தற்போதுதான் முதன் முதலில் தொடங்கப்பட்டு உள்ளது’ என்றார்.
மாநில அரசு நவீன தொழில்நுட்பத்துடன் தனித்துவமாக செயல்படுத்தி உள்ள இந்த திட்டம், தனது கனவு திட்டம் என்றும் அவர் தெரிவித்தார். பின்னர் அவர் கோகாவில் இருந்து தகேஜ் வரை படகில் பயணம் செய்தார். இந்த தொடக்க நிகழ்ச்சியில் மாநில முதல்-மந்திரி விஜய் ருபானி, துணை முதல்-மந்திரி நிதின் படேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கோகா மற்றும் தகேஜ் இடையே தரைவழியாக 310 கி.மீ. தூரம் உள்ள நிலையில், இந்த நீர்வழி போக்குவரத்து மூலம் பயண தூரம் 30 கிலோ மீட்டராக குறைகிறது. இதை 1 மணி நேரத்தில் கடக்க முடியும். இது மேற்படி நகர மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
தகேஜ் நகரில் சென்று இறங்கிய பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ‘சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு முக்கியமான முடிவுகளை நாங்கள் எடுத்துள்ளோம். இது மேலும் தொடரும். சீர்திருத்த திட்டங்களை அமல்படுத்தினாலும் நாட்டின் நிதி ஸ்திரத்தன்மை பராமரிக்கப்படும். முதலீட்டை அதிகரிக்கவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம்’ என்றார்.
ஜி.எஸ்.டி. உள்ளிட்ட நடவடிக்கைகளால் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது என்னும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மறுத்த மோடி, சீர்திருத்தம் மற்றும் கடினமான நடவடிக்கைகள் எடுத்த பிறகும் நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் செல்வதாக தெரிவித்தார். பொருளாதார அடிப்படை வலிமையாக இருப்பதாக ஏராளமான பொருளாதார வல்லுனர்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.