ஐதராபாத்:
புரோ கபடி லீக்:-
5-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது. அக்டோபர் 28-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்கும் 12 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. ‘ஏ’ பிரிவில் முன்னாள் சாம்பியன்கள் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யு மும்பை மற்றும் தபாங் டெல்லி, புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ், குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், ‘பி’ பிரிவில் இரண்டு முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், உத்தரபிரதேச யோத்தா ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 3 முறை மோத வேண்டும். அத்துடன் அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணியும் 21 லீக் ஆட்டத்தில் விளையாட வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.
தமிழ் தலைவாஸ் அணி தோல்வி:-
தொடக்க நாளான நேற்று நடந்த முதல் லீக் ஆட்டத்தில் முதல்முறையாக களம் காணும் தமிழ் தலைவாஸ் அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் 17-11 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்த தெலுங்கு டைட்டன்ஸ் அணி கடைசி வரை தனது முன்னிலையை தற்காத்து கொண்டது. தமிழ் தலைவாஸ் அணி சரிவில் இருந்து மீண்டு வர எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 32-27 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது.
தெண்டுல்கர்:-
தொடக்க விழாவில் நடிகர் அக்ஷய்குமார், கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜ், இந்திய பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த், நடிகர்கள் ராணா, சிரஞ்சீவி உள்பட பலர் கலந்து கொண்டு தொடக்க ஆட்டத்தை ரசித்து பார்த்தனர்.
புனேரி பால்டன் வெற்றி:-
நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் அணியும் யூ மும்பா அணியும் மோதின.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் 17-10 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டன் அணி முன்னிலை வகித்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய புனே அணி 33-21 என்ற புள்ளி கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது.
இன்று(சனிக்கிழமை) நடைபெறும் முதல் போட்டியில் ஜெய்பூர் பிங் பாந்தர்ஸ் அணியும் தபாங் டெல்லி அணியும் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி, பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.