சேலம்:
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துப்புரவு மற்றும் காவலாளி பணிகளை ஒப்பந்த முறையில் தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. தினக்கூலி அடிப்படையில் ஊழியர்களை நியமித்து அந்நிறுவனம் வேலை வாங்கி வருகிறது.
அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிக்கு மாறாக நோயாளிகளை வீல் சேரில் அழைத்து செல்லுதல், உள் நோயாளிகளுக்கு தினமும் மாத்திரை, மருந்து வாங்கி வருதல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர். அதனால் மருத்துவமனை பணியாளர்கள், துப்புரவு ஊழியர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.
தனியார் ஊழியர்களில் சிலர் குறிப்பிட்ட வார்டுகளில் தொடர்ந்து பணியாற்றி தினசரி வருமானம் பார்ப்பதை நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என மருத்துவமனை பணியாளர்கள் சரமாரியாக குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் மருத்துவமனையில் டாக்டரின் பரிந்துரை, அனுமதியின்றி ஆண் நோயாளி ஒருவருக்கு குளுக்கோஸ் ஏற்றி பணம் பறிக்கும் வீடியோ காட்சி வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் பொது மருத்துவ பிரிவு, 4-வது மாடியில் உள்ள ஒரு வார்டில் நோயாளிகளுக்கு தனியார் ஊழியர் ஒருவர் குளுக்கோஸ் ட்ரிப்ஸ் போட்டு 200 ரூபாய் பறிப்பது 9-ந்தேதி நடந்ததாக ஆடியோ பேச்சும் தெளிவாக உள்ளது.
இந்த ஆதாரங்கள் மருத்துவமனை டீன், கண்காணிப்பாளர் உள்பட மருத்துவமனை நிர்வாகத்தில் உள்ள அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் எதிரொலியாக நடந்த விசாரணையில் தனியார் நிறுவன ஊழியர்களான 4 ஆண்டுகளாக பணியாற்றும் பனமரத்துப்பட்டியை அடுத்த குரால்நத்தம் மோகன்ராஜ் (வயது 27), 3 ஆண்டுகளாக பணியாற்றும் குகை பகுதியைச் சேர்ந்த நடராஜ் (34) என்பது தெரியவந்தது. அந்த 2 பேரையும் டிஸ்மிஸ் செய்து ஒப்பந்த நிறுவன மண்டல மேலாளர் பால சுப்பிரமணியம் உத்தர விட்டார்.
இதுகுறித்து தனியார் நிறுவன நிர்வாகிகள் கூறுகையில், வீடியோ ஆதாரத்துடன் புகார் வந்த தால் அவர்கள் 2 பேரையும் டிஸ்மிஸ் செய்துள்ளோம். மேலும் இதுபோல் தவறுகள் செய்தால் கடும் நவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர்.